இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இந்திய அணியில் இருந்து வெளியேறியிருந்தார். ஆனாலும் தான் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதனால் இன்னும் சில ஆண்டுகள் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஷ்வின் :
ஆனால் தற்போது 38 வயதாகும் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தில் 9 கோடியே 75 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்தில் எடுத்திருந்தது. அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் சென்னை அணியில் இடம்பிடித்தார்.
அப்படி 2025 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்திருந்த அவர் அசத்தலாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நடைபெற்று முடிந்த தொடரில் படு மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார். அதனால் அவருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்ததையும் நாம் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் அடுத்த 2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அவர் சி.எஸ்.கே அணியிலிருந்து விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த வேளையில் அதற்கு முன்னதாகவே ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : எல்லா முடிவுகளுக்கு பின்னும் ஒரு புதிய துவக்கம் இருக்கும்.
அந்தவகையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டாராக என்னுடைய பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் உலகெங்கிலும் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாட இதுவொரு துவக்கம் என்று அஷ்வின் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ள அவர் இனி வருங்காலத்தில் வெளிநாடுகளில் நடக்கும் முக்கிய லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடுவர் என்கிற அவரது அடுத்தகட்ட பிளான் தெளிவாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் அர்ஷ்தீப் சிங் விளையாடியிருக்க வேண்டும்.. அவருக்கு கொடுத்த அட்வைஸ் பற்றி – பஞ்சாப் கோச் பேட்டி
கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான ரவிச்சந்திரன் 2025 வரை 221 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 2010-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2023 வரை 106 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



