ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அத்தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறுகிறது. சமீபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் 26 அப்பாவி மக்கள் இயற்கை எய்தினார்கள்.
அதற்கு இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2025 லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி விலகியது. அதே போல ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
ரசிகர்கள் அடிச்சுக்கூடாது:
இருப்பினும் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதில் எந்த தடையுமில்லை என்று இந்திய விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது. அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் இந்தியா விளையாடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லையில் நடந்த விஷயங்களுக்காக ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்களும் வீரர்களும் சண்டையிடக்கூடாது என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இம்முறை அழுத்தத்தை நன்றாக கையாளும் அணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளைப் போலவே 2023 ஆசியக் கோப்பை போட்டிகள் பொழுதுபோக்காக இருக்குமென உறுதியாக சொல்வேன். ஆனால் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ரசிகர்களும் வரம்பு மீறாமல் கட்டுக்கோப்புடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”
வாசிம் அக்ரம் கணிப்பு:
“ஏனெனில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை உலகம் முழுவதிலும் பில்லியன் கணக்கான மக்கள் பார்ப்பார்கள். இந்தியர்கள் தங்களுடைய அணி வெல்ல வேண்டும் என்ற தேசப்பற்றுடன் இருந்தால் அது பாகிஸ்தான் ரசிகர்களிடமும் இருக்கும். சமீப காலங்களில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தியா வெற்றி பெறும் அணியாக தொடரைத் துவக்கும்”
இதையும் படிங்க: புயலில் நின்ற சிகரம்.. ஆஸியில் ஹீரோ புஜாராவுக்கு.. சச்சின், கம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் உலகினர் வாழ்த்து மழை
“ஆனால் போட்டி நாளன்று அழுத்தத்தை சிறப்பாக கையாளும் அணியே வெற்றி பெறும். இம்முறையும் பாபர் அசாம் பாகிஸ்தானுக்கு விளையாட நான் விரும்பினேன். ஆனால் அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வெற்றிக்காக முன்னோக்கி வருவது அவசியம். ஆசியக் கோப்பை உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது நீண்ட காலமாகி விட்டது. அது மீண்டும் நடந்தால் இருநாட்டு ரசிகர்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்” என்று கூறினார்.



