இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த அவர் 2005ஆம் ஆண்டு முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். அங்கே சிறப்பாக விளையாடியதால் 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ராகுல் டிராவிட் போல களத்தில் நங்கூரமாகவும் பொறுமையாகவும் விளையாடும் ஸ்டைலை வெளிப்படுத்தினார்.
அதனாலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் 5 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பைப் பெறாத அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வெற்றிகளில் பங்காற்றினார். 2023 வரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்களை 43.60 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். 19 சதங்கள் 35 அரை சதங்கள் அடித்துள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
புஜாராவின் சாதனைகள்:
இந்நிலையில் கிரிக்கெட்டில் புஜாரா படைத்த முக்கியமான சாதனைகளின் விவரங்களைப் பார்ப்போம்.
1. 2006 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் 349 ரன்கள் அடித்த புஜாரா இந்தியாவை ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.
2. 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். அதனால் 2013 ஐசிசி எமர்ஜிங் பிளேயர் விருதை வென்று புஜாரா சாதனை படைத்தார்.
3. 2017 ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொறுமையின் சிகரமாக விளையாடிய புஜாரா 525 பந்துகள் எதிர்கொண்டு 202 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 500+ பந்துகள் எதிர்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ராகுல் டிராவிட் 495 பந்துகள் எதிர்கொண்டதே முந்தைய சாதனை.
ஆஸியில் இருமுறை ஹீரோ:
4. 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த அவர் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.
5. 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 2வது அதிக ரன்கள் அடித்த புஜாரா அதிக பந்துகளை (1258) எதிர்கொண்டு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை வெல்ல உதவினார்.
இதையும் படிங்க: 431 ரன்ஸ்.. தெ.ஆ அணியை வெறியுடன் அடித்த ஹெட், மார்ஷ், க்ரீன்.. ஆஸி வரலாறு காணாத சாதனை
6. சேனா நாடுகளில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக (7) முறை 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் புஜாராவை சேரும்.
7. சேனா நாடுகளில் அதிக (11) வெற்றிகளில் அங்கமாக இருந்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவரையே சேரும்.
8. கடந்த 40 வருடங்களில் ஒரு டெஸ்ட் போட்டியின் அனைத்து 5 நாட்களிலும் பேட்டிங் செய்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.



