ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய துணை கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டது மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் கடந்த சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்து சென்றார். 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்கள் அடித்த அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி அதிக ரன்களை அடித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்காதது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
காப்பாற்றாத கம்பீர்:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் டி20 அணியில் தவிர்க்க முடியாதவர் என்று கௌதம் கம்பீர் ஒரு முறை சொன்னதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அவரை கழற்றி விட்டுள்ளகம்பீர் சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றும் திவாரி விமர்சித்துள்ளார். மேலும் ஸ்ரேயாஸை கழற்றி விட்டது பற்றி தலைவர் அஜித் அகர்கர் சொன்ன காரணம் நம்பும்படியாக இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
எனவே இனிமேல் அணித் தேர்வையும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி திவாரி பேசியது பின்வருமாறு. “தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதனாலேயே அணித் தேர்வு நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்”
நேரலையில் ஒளிபரப்புங்க:
“அப்போது தான் விளையாட்டு ஆர்வகளுக்கு குறிப்பிட்ட வீரர்கள் ஏன் கழற்றி விடப்பட்டார்கள், குறிப்பிட்ட வீரர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது தெரியும். அதை விட்டுவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ஓரிரு வரிகளில் பதில் சொல்வது சரியானதல்ல. ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் ஆகிய தகுதியான வீரர்கள் தவற விடப்பட்டுள்ளார்கள். ஒரு பழைய பேட்டியில் ஜெய்ஸ்வால் போன்ற சிறந்த வீரரை டி20 கிரிக்கெட்டில் விட முடியாது என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்”
இதையும் படிங்க: 193க்கு ஆல் அவுட்.. தொடர்ந்து 10வது வருடமாக ஆஸியை சாய்த்த தெ.ஆ.. 5வது தொடர் சாதனை வெற்றி
“ஆனால் தற்போது அவரே பயிற்சியாளராக இருந்த போதிலும் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை. மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் வெளிப்படுத்திய விதத்திற்கு இந்திய அணியில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக அவர் அசத்திய விதம் அனைவருடைய கண்களைத் திறப்பதாக இருந்தது” என்று கூறினார்.



