ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வாலை நம்பவைத்து ஏமாற்றிய கவுதம் கம்பீர் :
அதன்படி வெளியான இந்த அறிவிப்பில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் தற்போது டி20 அணிக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று கம்பீர் ஏற்கனவே அளித்திருந்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏனெனில் கௌதம் கம்பீர் அந்த பழைய பேட்டியில் கூறும் போது : நிச்சயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணியில் ஒருசில தொடர்களில் இடம் பெறாமல் அடுத்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரராக விளையாடுவார் என்று கூறியிருந்தார். மேலும் முதல்தர போட்டிகளில் இரட்டை சதம், முச்சதங்களை விளாசியுள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் மூன்று விதமான இந்திய அணியிலும் அவர் இடம்பிடிப்பார் என்றும் பேசியிருந்தார்.
அவரது இந்த பழையை பேட்டியை கவனித்த இந்திய ரசிகர்கள் பலரும் இந்த ஆசிய கோப்பை தொடரிலேயே அவரை சேர்க்கவில்லை என்றால் நிச்சயம் 2026 டி20 உலக கோப்பையிலும் அவரை இந்திய அணி சேர்க்காது எனவே ஜெய்ஸ்வாலுக்கு ஏன் நம்பிக்கை அளித்து இப்படி ஏமாற்ற வேண்டும் என கம்பீரின் அந்த பேட்டியை பகிர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : இது அநியாயம்.. ஆசிய கோப்பையில் இல்லாத ஸ்ரேயாஸ்.. அந்த லிஸ்ட்ல கூட இருக்க தகுதியற்றவரா? அபிஷேக் நாயர்
ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த ஜெய்ஸ்வால் 3 விதமான போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டெஸ்ட் அணியில் மட்டுமே நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வருகிறார். அதுதவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவ்வப்போது உள்ளேயும், வெளியேயும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



