ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணித்தேர்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த தொடருக்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கம்பீர் ஆகியோரது தலைமையில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை தொடரில் புவி இடம்பெற வேண்டும் : சீக்கா கருத்து
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் யார் விளையாட வேண்டும்? யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்க வேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் அனுபவ வீரரான புவனேஸ்வர் குமாருக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : புவனேஸ்வர் குமாரை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சிறப்பாக பந்துவீசி வருகின்றார். கடைசியாக 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் அவர் பந்துவீசி இருந்தார். அந்த போட்டியில் அவர் சரியாக வீசவில்லை என்பதற்காக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தற்போது வரை அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அதிலும் குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். புதிய பந்தை பயன்படுத்தி அபாரமாக பந்துவீசும் அவர் இந்திய அணிக்கு விளையாட தகுதியானவர். எனவே அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளை பொறுத்தவரை கே.எல் ராகுலின் கட்டம் முடிந்து விட்டது.. இனி திரும்ப முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து
ஸ்ரீகாந்த் கூறியது போலவே நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த புவனேஸ்வர் குமார் 14 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 87 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


