இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகள், 85 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து 2013-ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 145 ஆட்டங்களிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் கே.எல் ராகுலுக்கு இந்திய டி20 அணியில் மூன்று ஆண்டுகளாக இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது.
கே.எல் ராகுல் டி20 இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை : ஆகாஷ் சோப்ரா
ஆனாலும் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் சரி, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் சரி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை மீண்டும் இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கே.எல் ராகுல் டி20 இந்திய அணியில் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் உண்மையிலேயே அற்புதமான வீரர் தான். ஐபிஎல் தொடர்களை எடுத்துப் பார்த்தால் கடந்த சில சீசன்களாகவே அவர் 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் பொறுமையாக விளையாடுகிறார் என்ற மோசமான பெயர் அவர்மீது விழுந்துவிட்டது.
கே எல் ராகுல் அதிரடியாக விளையாடுவதை ஏதோ தடுப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் நெருக்கடியான கட்டங்களின் போது அவர் தடுமாறுகிறார். மனதளவில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அவரால் மிகச் சிறப்பாக விளையாட முடியும். பும்ராவுக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளின் போது ஒருமுறை அவர் கவர் திசையில் அடித்த சிக்சரை நான் மறக்க மாட்டேன்.
என்னை பொறுத்தவரை தற்போதைய இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் என பல வீரர்கள் தங்களது நிலையான இடத்திற்காக காத்திருக்கின்றனர். எனவே கே.எல் ராகுலின் கதை டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இந்தியா எங்க விளையாடினாலும் ஜெயிக்கும்.. ஆனா ப்ளீஸ் இதைமட்டும் பண்ணாதீங்க – கேதார் ஜாதவ் பேச்சு
துவக்க வீரராக வாய்ப்பை இழந்த அவர் மிடில் ஆர்டரிலாவது விளையாடலாம் என்று பார்த்தால் இந்திய அணியின் தற்போதைய மிடில் ஆர்டரிலும் மிக பலமான வீரர்கள் இருப்பதால் கே.எல் ராகுல் மீண்டும் டி20 அணிக்கு திரும்புவது சாத்தியமற்றது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



