இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அதிலும் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது மறக்க முடியாததாக அமைந்தது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக ஆரம்பத்திலேயே அறிவித்தார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாடினார். அத்தொடரில் 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு தனியாளாக சிம்ம சொப்பனமாக செயல்பட்ட அவர் கடைசிப் போட்டியில் காயமடைந்தார். அதனால் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இங்கிலாந்தில் 5 போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
24 கேரட் கோல்ட்:
ஆச்சரியப்படும் வகையில் அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றியைக் காணவில்லை. அதன் காரணமாக ஒன்று முழுமையாக விளையாடுங்கள் இல்லையேல் ஓய்வு பெறுங்கள் என்று சில முன்னாள் வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ராவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமான பவுலிங் ஆக்ஷனை கொண்டிருப்பதால் மற்றவர்களைப் போல் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே பெரிய டெஸ்ட் தொடர்களில் பணிச்சுமை காரணமாக பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பும்ரா சில போட்டிகளில் விளையாடாமல் போனால் இந்திய அணிக்கு பிரச்சனை ஏற்பட அவர் ஒன்றும் பேட்ஸ்மேன் கிடையாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா போல எந்த பவுலரும் இல்லை”
ரிட்டையராக வெச்சுறாதீங்க:
“அவரை வலுக்கட்டாயமாக முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள். ஏனெனில் அவர் 24 கேரட் தங்கத்தைப் போன்றவர். கோகினூர் வைரத்தைப் போன்ற அவர் நீண்ட காலம் விளையாடுவது நல்லது. அவரால் நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர் விளையாடும் வரை விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: 1975 உலகக் கோப்பையில் ஆமைப்போல கவாஸ்கர்.. 174 பந்தில் 36 ரன்ஸ் எடுத்தது ஏன்? சக வீரர் கர்சன் கவ்ரி
“சரியோ தவறோ அவரைப் போன்ற தனித்துவ திறமையுடைய வீரர் விளையாடும் போது விளையாட வையுங்கள். ஏனெனில் பும்ராவை வைத்து உங்களால் பவுலிங் துறையை எளிதாக அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஒருவேளை பும்ரா ஓப்பனிங் அல்லது 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேனாக இருந்து கொண்டு 3 போட்டிகளுக்கு மேல் விளையாட மாட்டேன் என்று சொன்னால் அதுவே பிரச்சனையாகும். பொதுவாகவே 3 – 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பவுலர்களை நீங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியம்” என்று கூறினார்.



