2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு பிரிவுகளில் தலா நான்கு அணிகள் பங்கேற்கும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு போட்டிக்கான தேதிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் : ஹர்பஜன் சிங்
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு விரைவில் நடத்தப்பட்டு இந்த தொடரில் பங்கேற்க போகும் வீரர்களின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இம்முறை 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
நமது நாட்டின் எல்லைப் பகுதியில் பதற்ற நிலவும் போது அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது ஏற்கக்கூடியது அல்ல. இரு நாடுகளுக்கு இடையே சண்டை நீடிக்கும் போது நாம் அவர்களுடன் விளையாட செல்வது சரியாக இருக்காது. எல்லையில் நமது வீரர்கள் உயிர் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது நம்மால் எப்படி அவர்களுடன் போட்டியில் பங்கேற்க முடியும்.
இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்து விடாது. நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது. அதனை ஒப்பிடுகையில் எதுவுமே பெரியது கிடையாது. எனவே இந்த பிரச்சனை எல்லாம் தீர்க்கும் வரை அவர்களுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கு இடமில்லை.
இதையும் படிங்க : ரஜத் படிதார் பெருசா ஒன்னும் செய்யல.. ஆர்சிபி கோப்பையை வெல்ல இதான் காரணம்.. புவனேஷ்வர் பேட்டி
நமது நாடு தான் எப்போதும் முதன்மையான ஒன்று என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



