ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு வழியாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் விளையாடி வரும் அந்த அணியால் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக விராட் கோலி தலைமையில் 2016 சீசனில் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி கோப்பையை கோட்டை விட்டது.
அதனால் விராட் கோலி இருக்கும் வரை ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்பது போன்ற விமர்சனங்கள் வந்தன. அதனால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய விராட் கோலியை தொடர்ந்து டு பிளேஸிஸ் தலைமையிலும் ஆர்சிபி கோப்பையை வெல்லவில்லை. அந்த சூழ்நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக வந்த முதல் வருடத்திலேயே ஆர்சிபி தங்களது கனவு கோப்பையை வென்று சாதனை படைத்தது.
வென்ற பெங்களூரு:
அவருடைய தலைமையில் விராட் கோலி 17 வருடங்கள் காத்திருந்து தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் காலம் காலமாக தங்களை கிண்டலடித்து விமர்சித்தவர்களுக்கு ஆர்சிபி அணி பதிலடியும் கொடுத்தது. இந்நிலையில் கேப்டனாக ரஜத் படிதார் வெற்றிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று ஆர்சிபி அணிக்காக விளையாடும் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஆர்சிபி அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் மேட்ச் வின்னர்களாக இருந்ததே வெற்றிக்கு காரணமாம் என்று புவனேஸ்வர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி என்னை அல்லது விராட் கோலி உட்பட யாரை வாங்கினாலும் அவர்கள் தங்களுடைய சொந்த நட்பை தாண்டி களத்தில் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும்”
வெற்றியின் ரகசியம்:
“களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இம்முறை ஆர்சிபி அணி அனுபவமிக்கதாக இருந்தது வெற்றியின் சிறந்த பகுதியாகும். ரஜத் அதிகமாக செய்வதற்கு எதுவுமில்லை. அவர் தயக்கமின்றி முடிவுகளை எடுத்தார். எப்போது முடிவுகளை மாற்ற வேண்டும், எப்போது அப்படியே விட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பதில் அவருடைய தரம் சிறந்தது”
இதையும் படிங்க: இனிமேல் முகமது ஷமி டி20 இந்திய அணிக்கு திரும்ப வாய்பில்லை.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா
“இம்முறை ஆர்சிபி அணியில் மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில் லெவனில் இருந்த வீரர்கள் அனைவருமே வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு போட்டிகளை வென்று கொடுத்தனர். பொதுவாகவே நீங்கள் ஓரிரு வீரர்களை சார்ந்திருந்தால் பெரிய தொடரை வெல்ல முடியாது. சில போட்டிகளில் பவுலர்கள் முன்னே வந்து அசத்தினார்கள். மற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அசத்தினார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒரு புதிய வீரர் வந்து எங்களுடைய வெற்றிக்கு உதவினார்” என்று கூறினார்.



