இந்திய கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்புக்காக காத்திருந்தார். நீண்ட காத்திருப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 371 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரு சில தொடர்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் சிறப்பாக விளையாடிய அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
புதிய முடிவை கையில் எடுத்த சர்பராஸ் கான் :
அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை இந்திய அணி கழட்டிவிட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி மலை போல் ரன்களை குவித்திருந்தாலும் அவரது கூடுதல் உடல் எடை அவரது நிராகரிப்புக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அவர் தனது உடல் எடையில் இருந்து 17 கிலோ குறைத்து பிட்டாக மாறியிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இருந்தாலும் இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து பயணித்து அங்கு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் அற்புதமாக விளையாடி இருந்தார். இப்படி தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தினாலும் வாய்ப்பு மறுக்கப்படுவதால் சர்பராஸ் கான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் முன்னாள் வீரர்களான கவாஸ்கர், சச்சின் ஆகியோரது வழியில் ஒரு முக்கிய முடிவை சர்பராஸ் கான் கையில் எடுத்துள்ளார். அதாவது மும்பையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் விளையாட தயங்கும் கங்கா லீக் என்கிற தொடரில் சர்ஃபராஸ் கான் விளையாட இருக்கிறார். ஏனெனில் கங்கா லீக் போட்டிகள் மழைக்காலத்தில் நடைபெறுவதால் மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது.
பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் அந்த தொடரில் பங்கேற்றால் புள்ளி விவரங்கள் சரியும் என்பதால் பல்வேறு வீரர்களும் அந்த தொடரில் பங்கேற்க தயங்குவார்கள். ஆனால் முன்னாள் வீரர்களான கவாஸ்கர், சச்சின், சந்தீப் பாட்டில், திலீப் வெங்சர்க்கார் போன்றோர் அந்த தொடரில் விளையாடி தங்களது திறமையை மெருகேற்றி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் யார்? ஆசிய கோப்பை தொடருக்கான போட்டியில் இருக்கும் 2 வீரர்கள் – வாய்ப்பு யாருக்கு?
எனவே கடினமான அந்த தொடரில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க சர்ஃபராஸ் கான் முடிவு செய்துள்ளார். அதே வேளையில் இந்த கங்கா லீக் தொடரில் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் சதம் அடித்திருந்ததால் மீண்டும் இம்முறை கங்கா லீக் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் கவனத்தை ஈர்க்க சர்பராஸ் கான் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



