இங்கிலாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியானது அந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது அடுத்ததாக எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
சஞ்சு சாம்சனுக்கு மாற்றுவீரர் யார்? :
இந்த ஆசிய கோப்பை தொடரானது டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு 20 ஓவர் போட்டிகளாக நடைபெறவுள்ள வேளையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே இந்த தொடரில் விளையாட இருக்கிறது. அதற்கான அணித்தேர்வு விரைவில் அஜித் அகார்கர் தலைமையில் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் அப்படி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு குழுவினரின் மூலம் நடைபெற இருக்கும் வேளையில் இந்திய டி20 அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதே போன்று விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக பேக்கப் வீரராக யார் தேர்வு செய்யப்படுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் காயம் அடைந்து அணியிலிருந்து வெளியேறியுள்ளதால் அவரால் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம்பிடிக்க முடியாது. அதேவேளையில் பேக்கப் விக்கெட் கீப்பருக்கான போட்டியில் தற்போது 2 வீரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் துருவ் ஜுரேல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அந்த ஒரு இடத்திற்காக போட்டியில் இருக்கின்றனர்.
அதில் இஷான் கிஷன் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி இருந்தாலும் சமீபத்தில் அவருடைய பார்ம் சற்று சுமாராகவே இருந்து வருகிறது. அதுமட்டும் இன்றி அவர் 27 வயதினை எட்டிவிட்டார். இதனால் அவரை அணியில் எடுப்பது கடினம் என்றே தோன்றுகிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் அசத்தினாலும் கே.எல் ராகுலுக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பில்லை – காரணம் என்ன?
ஆனால் 23 வயதான விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேல் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் மாற்று விக்கெட் கீப்பராக முக்கிய பங்கினை வகித்திருந்தார். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரையே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



