இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்திய இந்திய அணிக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு எவ்வித சர்வதேச போட்டிகளும் இல்லை என்பதனால் முழு ஓய்வினை எடுத்துக் கொள்கிறது.
அக்சர் படேலுக்கு ஏற்படவுள்ள ஏமாற்றம் :
அதன் பின்னர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறயிருக்கும் வேளையில் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும் அதிலும் குறிப்பாக அக்சர் படேலை மட்டம் தட்டி சுப்மன் கில்லிற்கு டி20 துணை கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் இந்திய அணியின் மூன்று வகையான பார்மேட்டுக்கும் ஒரே கேப்டனை நியமிக்கும் நோக்கில் சுப்மன் கில்லை பிசிசிஐ தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக சுப்மன் கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதால் கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த அவரை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவரை தேர்வுசெய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்கனவே ஏற்கனவே இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் அக்சர் பட்டேலின் பதவியினை பறிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அதை யார் பாத்துப்பா? ஐபிஎல் 2026 தொடரில் நீங்க விளையாடியே ஆகனும் என்ற ரசிகர் கோரிக்கைக்கு தோனி பதில்
இந்திய டி20 அணியில் அக்சர் பட்டேல் மிகச் சிறப்பான ஆல்ரவுண்டராகவும், துணை கேப்டனாகவும் செயல்பட்டு வரும் வேளையில் சுப்மன் கில்லை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அக்சர் பட்டேலின் பதவியை பறிக்க இருப்பது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



