இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது அந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. அதற்கு அடுத்து இம்மாதம் முடியும் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத இந்திய அணி முழு ஓய்வினை எடுத்துக்கொள்ள இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரின் வாய்ப்பை இழக்கும் 3 இந்திய வீரர்கள் :
அதற்கு அடுத்து செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இம்முறை 20 ஓவர் போட்டிகளாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய 3 இந்திய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெற முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த மூன்று வீரர்கள் குறித்த பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
1) ரிஷப் பண்ட் : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தினை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க நினைத்து தவறவிட்ட ரிஷப் பண்ட் தனது கால் பகுதியில் காயமடைந்தார். இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவரது காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாட முடியாது.
2) நிதீஷ் ரெட்டி : இங்கிலாந்து தொடரில் இடம்பிடித்து விளையாடிய நிதீஷ்குமார் ரெட்டியும் அந்த தொடரின் பாதியிலேயே தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறியதை அடுத்து தற்போது அவர் சிகிச்சையினை மேற்கொண்டு வருகிறார். அவரது காயம் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதனால் அவரும் இந்த ஆசிய கோப்பை தொடரினை தவறவிட அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் ஹார்டிக் பாண்டியா அணியில் இருப்பதால் அவருடைய தேவை பெரிதும் இருக்காது.
இதையும் படிங்க : “திஸ் இஸ் நாட் எ யங் டீம்”, “திஸ் இஸ் கன் டீம்” இங்கி தொடர் ஆரம்பித்த போது கம்பீர் சொன்ன வார்த்தை – கருண் நாயர் பேட்டி
3) ஜஸ்ப்ரீத் பும்ரா : இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பணிச்சுமை காரணமாக இங்கிலாந்து தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதுதவிர்த்து இனிவரும் தொடர்களிலும் முக்கியமான போட்டிகளில் மட்டுமே அவரை விளையாட வைக்க வேண்டும் என்று நிர்வாகம் நினைப்பதனால் ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பும்ராவும் ஆசிய கோப்பை தொடரை தவறவிட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



