374 ரன்ஸ்.. 4, 4, 6.. 39 பந்தில் மாஸ் காட்டிய சுந்தர்.. ஓவலில் வரலாற்றின் சாதனை இலக்கை நிர்ணயித்த இந்தியா

Washington Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 31 முதல் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 247 ரன்களை குவித்து 23 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதை அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு ராகுல் 7, சுதர்சன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெயஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப் மூன்றாவது நாளில் அற்புதமாக பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். சுமாரான பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட அவர் தனது முதல் அரை சதத்தை அடித்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 66 ரன்கள் விளாசி அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் கில் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்ட இங்கிலாந்தை பந்தாடிய ஜெய்ஸ்வால் தொடரில் 2வது சதத்தை அடித்து 118 ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் எதிர்புறம் களமிறங்கி தடுமாறிய கருண் நாயர் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

மாஸ் காட்டிய சுந்தர்:

அடுத்து வந்த ஜடேஜா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அசத்திய துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு 34 ரன்கள் குவித்து பெவிலியன் திருப்பினார். அடுத்து வந்த சுந்தர் நிதானத்தை காட்டிய நிலையில் எதிர்புறம் அசத்திய ஜடேஜா அரை சதத்தை அடித்து 53 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் பட்டாசாக பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தர் 4 சிக்சர் 4 பவுண்டரியுடன் 39 பந்தில் அரை சதத்தை அடித்து 53 (46) ரன்னில் அவுட்டானார்.

குறிப்பாக 4, 4, 6 என அடுத்தடுத்த பௌண்டரிகளை தெறிக்க விட்ட அவர் அரை சதத்தை அடித்து ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்தார். இறுதியில் இந்தியா 396 ரன்கள் குவித்து இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங்க் 5 விக்கெட்டுகளை எடுத்தார். வரலாற்றில் இங்கிலாந்து அதிகபட்சமாக 2022 பர்மிங்காம் போட்டியில் 378 ரன்களை வெற்றிகரமாக செய்துள்ளது.

இதையும் படிங்க: 118 ரன்ஸ்.. 23 வயதில் ரவி சாஸ்திரி, சச்சினின் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. பந்தாடும் இந்தியா

இத்தொடரின் முதல் போட்டியிலும் 371 ரன்களை இங்கிலாந்து சேஸிங் செய்துள்ளது. ஆனால் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் 21ஆம் நூற்றாண்டில் எந்த அணியும் 250 ரன்களை கூட வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. 2024இல் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை 219 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச இலக்காகும். ஒட்டுமொத்தமாக 1902ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கே 263 ரன்களை இங்கிலாந்து அடித்ததே வரலாற்றின் அதிகபட்ச வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட இலக்காகும். எனவே ஓவல் மைதானத்தில் நல்ல இலக்கை நிர்ணயித்துள்ள இந்தியா பந்து வீச்சில் அசத்தி வெற்றி பெற முயற்சிக்கவுள்ளது.

Advertisement