இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று மான்செஸ்டர் நகரில் துவங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 48 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்திருந்த வேளையில் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார். பின்னர் வலியால் துடித்த அவரை இந்திய அணி நிர்வாகம் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியாது.
ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜுரேல் பேட்டிங் செய்ய முடியுமா? :
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய நினைத்த ரிஷப் பண்ட் அதனை கணிக்க தவறி காலில் அடிபட்டு கொண்டார். அவரது இந்த காயத்திற்கான பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காயம் குணமடைய ஆறு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு போட்டியின் முதல் நாள் மைதானத்திலிருந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறிய அவர் இரண்டாம் நாளில் பேட்டிங் செய்ய வருவாரா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன.
ஆனால் தற்போது வெளியான அறிவிப்பின்படி : இந்த ஆட்டத்தில் மீண்டும் ரிஷப் பண்ட் தொடர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் இந்த போட்டியில் விளையாட இருக்கிறார். இந்நிலையில் அப்படி துருவ் ஜுரேல் எஞ்சியுள்ள போட்டியில் ஆடும்போது ரிஷப் பண்டிற்கு பதிலாக பேட்டிங் செய்ய முடியுமா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. இந்த கேள்விக்கு விதிமுறை கூறுவது என்ன? என்பது குறித்து சில கருத்துக்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் ரூல்ஸ் கூறுவது யாதெனில் : ரிஷப் பண்ட்க்கு பதிலாக ஜுரேல் எஞ்சியுள்ள போட்டியில் விளையாடினாலும் அவரால் பேட்டிங் செய்ய முடியாது. ஏனெனில் சப்ஸ்டியூட்டாக வரும் வீரர்கள் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. எனவே ரிஷப் பண்டிற்கு மாற்று வீரராக துருவ் ஜுரேல் வந்தாலும் அவரால் விக்கெட் கீப்பிங் பணியை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
தற்போது ரிட்டையர்டு ஹர்ட் மூலமாக வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாமல் போனால் அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தாலே ஆல் அவுட் என்கிற நிலைக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இங்கிலாந்தில் ரிஷப் பண்ட் மாதிரி நிறைய வீரர்களுக்கு அந்த மரியாதை கிடைக்காது.. ஸ்டுவர்ட் ப்ராட் பாராட்டு
இதே ஒருவேளை ரிஷப் பண்ட் கால் வலியால் வெளியேறாமல் கன்கஷன் மூலமாக வெளியேறி இருந்தால் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் பேட்டிங் செய்து இருக்கலாம். ஆனால் ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் ஜுரேல் பேட்டிங் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.



