இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரின் துவங்குகிறது. அப்போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
முன்னதாக இத்தொடரில் ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட போது விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இதற்கு முன் வெளிநாடுகளில் பெரிய ரன்கள் குவித்திராத சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த கில் அவர்களுக்கு பதிலடி கொடுத்து 2வது போட்டியில் 430 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
ஜாம்பவான்கள் போல:
அதன் வாயிலாக பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற சாதனைகளையும் அவர் படைத்தார். இந்நிலையில் சுப்மன் கில் தன்னுடைய பொறுமையால் பர்மிங்காமில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் மிட்-டே பத்திரிக்கையில் கூறியது பின்வருமாறு.
“இங்கிலாந்தில் இந்தியா 3 முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. 1971, 1986, 2007 ஆகிய வருடங்களில் அஜித் வடேகர், கபில் தேவ், ராகுல் டிராவிட் ஆகியோருடைய தலைமையில் இந்தியா வென்றுள்ளது. அந்த மூவருமே எப்போதும் எதிர்பார்க்கக் கூடிய சிறந்த கூலான கேப்டன்கள். வடேகர் அமைதியான ஸ்டைலைக் கொண்டவர், கர்ஜித்தாலும் கட்டுப்பாடான ஸ்டைலை கொண்ட கபில், டிராவிட்டின் தீவிரமான மற்றும் சிந்தனை ஸ்டைல் சிறப்பானது”
கவாஸ்கர் பாராட்டு:
“அந்த மூவருமே எந்த ஒரு சூழ்நிலையிலும் உற்சாகமாக இருந்ததில்லை. ஆனால் அமைதியை உறுதியாகக் கொண்டிருந்தனர். பர்மிங்காமில் சுப்மன் கில் அந்த மூவரின் கலவையைப் போல் தோற்றமளித்தார். ஒரு இரட்டை சதம் மற்றும் சதமடித்த போது கர்ஜிக்கும் வகையில் கொண்டாடிய அவரது பந்து வீச்சாளர்கள் 2 இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது சிந்தனையுடன் செயல்பட்டு அசத்தினார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? – சுரேஷ் ரெய்னா கணிப்பு
இதைத் தொடர்ந்து 4வது போட்டி நடைபெறும் மான்செஸ்டரிலும் இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. எனவே இம்முறை கில் தலைமையில் அந்த மைதானத்திலும் வெற்றி பெற இந்திய அணி தயாராகி வருகிறது. அந்தப் போட்டிக்கான இந்திய அணியின் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



