லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியின் கடைசி நாளின் போது இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவைப்பட்டது. ஏற்கனவே நான்காம் நாளின் முடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி இந்த சேசிங்கை எப்படியாவது பூர்த்தி செய்து விடும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
வாஷிங்டன் சுந்தரை விமர்சித்த பிரபல வர்ணனையாளர் :
ஆனால் கடைசி நாளில் அந்த இலக்கை துரத்த முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்திற்கு முன் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளரான மார்க்கஸ் ட்ரஸ்கோதிக் : ஐந்தாம் நாள் காலை ஒரு மணி நேரத்திலேயே இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெறுவோம் என்று சவால் விட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் : நிச்சயம் இந்திய அணி ஐந்தாவது நாள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வெற்றி பெறும் என்றும் அதற்கு தேவையான பேட்ஸ்மேன்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் இப்படி கூறியும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அவரது கருத்து கிண்டல் செய்யும் விதமாக பிரபல வர்ணனையாளரான டேவிட் லாயிட் வாஷிங்டன் சுந்தரை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டிக்கு முன்னதாக வாஷிங்டன் சுந்தர் பேசியதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது இன்னிங்சின் போது சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஐந்தாவது நாளில் எளிதாக இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கையாக பேசியிருந்தார். அதை இங்கிலாந்து வீரர்களும் கேட்டு இருப்பார்கள். எனவே அவருக்கு எதிராக சரியான திட்டங்களுடன் வந்து அவரை வீழ்த்தியுள்ளனர். வெறும் 4 பந்துகளை மட்டுமே அவர் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எதிர்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க : பேட்ஸ்மேன்களால் தோத்தா இந்தியா.. ஜடேஜா அந்த 5 ஓவரில் 20 ரன்ஸ் அடிச்சுருந்தா ஜெய்ச்சுருக்கும்.. அசாருதீன் பாராட்டு
வெறும் வார்த்தைகளால் பேசாமல் செயல்பாட்டிலும் உங்களது திறமையை காட்ட வேண்டும். வாயால் பேசிவிட்டு அதை செய்ய முடியாத வீரருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இப்படி ஒரு சம்பவத்தின் மூலம் அவர் நிறைய கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். இனி எதையும் வாயால் பேசாமல் செயல்பாட்டில் காண்பியுங்கள் என்று வாஷிங்டன் சுந்தரை தாக்கி டேவிட் லாயிட் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



