லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து முதல் நாளில் 251/4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23 ரன்னில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
ஓலி போப் 44 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கிய நிலையில் ஹாரி ப்ரூக் 11 ரன்னில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் ஜோ ரூட் 99*, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்தப் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் என்று அனைவரும் நினைத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
ரூட் இஸ் பேக்:
ஆனால் அதற்கு நேர்மாறாக மெதுவாக விளையாடிய இங்கிலாந்து துரோகம் செய்துள்ளதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இங்கிருந்து இங்கிலாந்தை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா வெல்வது கடினம் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் பிட்ச் முதல் நாளிலேயே ஸ்லோவாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“அது இங்கிலாந்துக்கு சிறப்பான நாள். அனைவரும் இங்கிலாந்து பஸ்பால் அணுகுமுறையை தொடரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் குறும்புபாலை விளையாடிய அவர்கள் அனைவருக்கும் துரோகம் செய்தனர். ஏனெனில் பொதுவாக 4 – 4.5 ரன்ரேட் வேகத்தில் விளையாடக்கூடிய அவர்கள் இன்று 3 ரன்ரேட்டில் விளையாடினார்கள். இங்கிலாந்தின் வெற்றிக்கு ஜோ ரூட் ரன்கள் அடிப்பது முக்கியம் என்று நான் கடந்த வீடியோவில் தெரிவித்திருந்தேன்”
அஸ்வின் கவலை:
“தரமான அவர் சரியான நேரத்தில் வந்துள்ளார். அது டெஸ்ட் போட்டி எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு சிறந்த பாடமாக அமைந்தது. ரூட் இஸ் பேக். லார்ட்ஸ் பிட்ச் துணைக் கண்டத்தில் இருப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக அங்கே 60 ஓவர்களுக்கு பின்பு தான் பந்து மென்மையாகும். ஆனால் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்து ரூட்டின் பேட்டில் கீழே பட்டது. இங்கிலாந்தில் முதல் நாளில் நீங்கள் அது போன்ற பந்துகளை எதிர்பார்க்க மாட்டீர்கள்”
இதையும் படிங்க: இந்தியா அதை யூஸ் பண்ணி பஸ்பாலை ஆஃப் பண்ணிட்டாங்க.. இதுவும் நல்ல ஆட்டமே.. ஓலி போப் பேட்டி
“லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் பவுன்ஸ் எப்போதும் கவலையைக் கொடுக்கக்கூடியது. நித்திஷ் ரெட்டி 2 விக்கெட்டுகள் எடுத்து பென் ஸ்டோக்ஸ்க்கு பெரிய பிரச்சினையைக் கொடுத்தார். மொத்தத்தில் இந்த பிட்ச் வித்தியாசமான பவுன்ஸ் மற்றும் வேகத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் இங்கிலாந்தை உங்களால் 350க்குள் சுருட்ட முடியுமா? என்று கேட்பேன். ஏனெனில் இங்கிலாந்து அதிகமாக விளையாடும் போது பிட்ச் தந்திரம் செய்யலாம்” என்று கூறினார்.



