இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அடுத்ததாக ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாளில் 251/4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பென் டக்கெட் 23, ஜாக் கிராவ்லி 18 ரன்களில் நித்திஷ் ரெட்டி வேகத்தில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆடரில் நிதானத்தைக் காட்ட முயற்சித்த ஓலி போப் 23, ஹாரி ப்ரூக் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
பஸ்பாலை அடக்கிய இந்தியா:
ஆனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 99*, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39* ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து வருகிறார்கள். முன்னதாக இத்தொடரில் இங்கிலாந்து பஸ்பால் என்ற பெயரில் 4க்கும் மேற்பட்ட ரன்ரேட் விகிதத்தில் வேகமாக பேட்டிங் செய்து வந்தது. அதே போல இப்போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து முதல் நாளில் மிகவும் மெதுவாக சாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில் லார்ட்ஸ் பிட்ச்சில் இந்திய பவுலர்கள் துல்லியமாக பவுலிங் செய்ததால் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி வேகமாக விளையாட முடியவில்லை என்று இங்கிலாந்து வீரர் ஓலி போப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பிட்ச்சில் நீங்கள் அடித்து நொறுக்க முடியாது. இந்திய அட்டாக் சரியான லென்த்தில் பந்து வீசி ரன்கள் அடிப்பதை கடினமாக்கி விட்டனர்”
கடினமாக்கிய இந்திய:
“எனவே எங்களுடைய வழக்கமான ஆட்டத்தை இங்கே வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் 250/4 என்பதும் நல்ல ஸ்கோர். அதே சமயம் நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக ரன்கள் அடிக்க விரும்பினோம். ஆனால் இந்த பிட்ச்சில் இந்திய பவுலர்கள் மிகவும் நன்றாக பவுலிங் செய்துள்ளனர். சில நேரங்களில் நீங்கள் அதிரடியாக விளையாடி எதிரணி மீது அழுத்தத்தைப் போட விரும்புவீர்கள்”
இதையும் படிங்க: 4 ஆவது சர்வதேச வீரராக இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ஜோ ரூட் – விவரம் இதோ
“ஆனால் இன்று நாங்கள் முற்றிலும் வித்தியாசமான அணுகு முறையைப் பின்பற்றினோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்தை 350 ரன்களுக்குள் சுருட்ட இந்திய அணி முயற்சிக்க உள்ளது. அதற்கு பும்ரா இன்னும் சில விக்கெட்டுகளை வேகமாக எடுப்பது அவசியமாகிறது.



