இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்துப் போராடிய இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கும் சேர்த்து 2வது போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது.
அதனால் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் 3வது போட்டியில் வெற்றி பெற்று முன்னிலைப் பெறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் திரும்புவது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸ்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3வது போட்டி ஜூன் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. 1814ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இரு நூற்றாண்டு பழமை வாய்ந்த மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா, தாயகம் என்றழைக்கப்படுகிறது. 31000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளைக் கொண்ட இம்மைதானத்தில் 1884 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா மொத்தம் 19 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 12 தோல்விகளைச் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்தன. 2014, 2021இல் தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் இந்தியா மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றது.
வெதர் ரிப்போர்ட்:
லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறும் 5 நாட்களும் மழை பெய்வதற்கு பெரிய வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையும், 19 – 30 டிகிரி செல்சியஸ் அளவில் மிதமான வெப்பமும் நிலவும் என்று தெரிய வருகிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
லார்ட்ஸ் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. அங்கே வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்து சவாலைக் கொடுப்பார்கள். அந்த சவாலை சமாளித்து நிலையாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் நிச்சயம் பெரிய ரன்கள் குவிக்க முடியும். இங்கே நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்வது சவாலாக மாறக்கூடும். கடைசி கட்ட நாட்களில் ஸ்பின்னர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்
இதையும் படிங்க: இப்போ “தேனிலவு” மாதிரி தான் இருக்கும்.. ஆனா இனிமே தான் அந்த பிரஷர சுப்மன் கில் பாப்பாரு – கங்குலி கருத்து
இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 310 ஆகும். வரலாற்றில் இங்கே நடைபெற்ற 147 போட்டிகளில் முதலில் பேட்டிங் அணிகள் 53 வெற்றிகளும், முதலில் பவுலிங் செய்த அணிகள் 43 வெற்றிகளும் பெற்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



