இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்ததாக ஜூலை இரண்டாம் தேதி இரண்டாவது போட்டி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த கருண் நாயர் 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை நழுவ விட்டாலும் 87 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் நங்கூரமாக பேட்டிங் செய்தார்.
சுப்மன் கில் அபாரம்:
இருப்பினும் எதிர்புறம் ரிஷப் பண்ட் 25, நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 211/5 என இந்தியா தடுமாறியது. ஆனால் இந்தப் பக்கம் இந்தியாவை தாங்கிப் பிடித்த கில் முதல் நாளிலேயே சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா 6வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 87 ரன்கள் குவித்து இந்தியாவை வலுபடுத்தி சென்றார்.
அடுத்ததாக வந்த வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பங்கிற்கு பொறுப்புடன் 43 ரன்கள் குவித்து அசத்தினார். அவர்களுடன் இணைந்து விளையாடிய கில் இரட்டை சதத்தை அடித்து 269 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய கேப்டனாக சாதனை படைத்து பெவிலியன் என்று திரும்பினார். அவருடைய சிறந்த ஆட்டத்தால் இந்தியா 587 ரன்கள் எடுத்தது.
பஸ்பாலை நொறுக்கிய இந்தியா:
இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்த பின்பும் அதிக ரன்கள் (587) குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2013 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 83/5 என சரிந்த இந்தியா கடைசியில் 453 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கேப்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இங்கிலாந்து பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி விளையாடி வருவதை அனைவரும் அறிவோம்.
இதையும் படிங்க: 269 ரன்ஸ்.. சச்சின், விராட் கோலியின் ஆல் டைம் சாதனைகளை உடைத்த கில்.. இந்தியாவுக்காக 2 புதிய வரலாற்று சாதனை
அவர்களது தலைமையில் இந்தப் போட்டியில் தான் இங்கிலாந்து அதிகபட்ச ரன்களை வாரி வழங்கியுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பின் உலகின் எந்த அணியும் இங்கிலாந்துக்கு எதிராக 580 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை. ஆனால் இப்போட்டியில் பஸ்பால் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா பென் ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோரை ஆட்டிப் பார்த்துள்ளது என்றே சொல்லலாம். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயம் பஷீர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.



