இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 2 ரன்னில் அவுட்டானார்.
இருப்பினும் ஜெயஸ்வால் நிதானமாக விளையாடி ரன்களை குவித்த நிலையில் எதிர்புறம் வந்த கருண் நாயர் 31 ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் கில் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய் ஸ்வால் சதத்தை நழுவ விட்ட போதிலும் 87 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
ஜடேஜா – கில் ஜோடி அபாரம்:
அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் கொஞ்சம் அதிரடி காட்ட முயற்சித்து 25 ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் போல்டானார். ஆனால் அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா மிகவும் பொறுப்புடன் விளையாடி தம்முடைய அனுபவத்தைப் பயன்படுத்தி நங்கூரத்தைப் போட்டார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் கில் இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து சதத்தை அடித்து அசத்தினார்.
தொடர்ந்து நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவும் அரை சதத்தை அடித்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தியது. அதில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 89 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
கபில் தேவ் சாதனை சமன்:
இதையும் சேர்த்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அவர் 8வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் 7 அல்லது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கி 2வது அதிக முறை 50+ ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. எம்எஸ் தோனி: 10 (52)
2. கபில் தேவ்: 8 (50)
2. ரவீந்திர ஜடேஜா: 8* (37)
இதையும் படிங்க: குல்தீப் யாதவ் விடயத்தில் இந்திய அணி செய்த தவறு.. சுட்டிக்காட்டி விமர்சித்த கங்குலி – விவரம் இதோ
அவருடைய நல்ல ஆட்டத்தால் 2வது நாள் உணவு இடைவேளையில் இந்தியா 419/6 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் கேப்டன் சுப்மன் கில் 168* ரன்களுடன் இந்தியாவை 500 ரன்கள் தாண்ட வைக்க முயற்சித்து வருகிறார். அவருக்கு வாசிங்டன் சுந்தர் 1* ரன் எடுத்து கை கொடுத்து வருகிறார். கடந்தப் போட்டியை போல் அல்லாமல் இப்போட்டியில் இந்தியா 500 ரன்களை தாண்டுவதற்கு முழுமூச்சுடன் போராட உள்ளது.



