இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 101, ராகுல் 42, கேப்டன் சுப்மன் கில் 147, ரிஷப் பண்ட் 134 ரன்களை குவித்து அசத்தினார்கள்.
அதனால் 431/3 என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா கண்டிப்பாக 500 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்த கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கத் தவறினார்கள். அதனால் இந்தியாவை 471 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் டாங் தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
மிஸ்ஸான 600 ரன்கள்
அடுத்து விளையாடும் இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 209/3 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு பென் டக்கெட் 62, ஓலி போப் சதத்தை அடித்து அசத்தினார்கள். வழக்கம் போல இந்திய அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முதல் 3 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பாக பவுலிங் செய்து வெற்றிக்கு போராடி வருகிறார். ஆனால் மற்ற பவுலர்கள் அவருக்கு கை கொடுக்காததால் இந்தியா 2வது நாளில் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் 600 ரன்கள் அடிக்கும் பொன்னான வாய்ப்பை இந்தியா தவற விட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அடுத்தப் போட்டிகளில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஸ்விங் செய்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுப்பார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
கங்குலி அட்வைஸ்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹெண்டிங்லே பிட்ச் இவ்வளவு காய்ந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தியா 600 ரன்கள் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிட்ச் நாட்கள் செல்ல செல்ல சமமின்றி பவுன்ஸ் ஆகத் துவங்கியிருக்கும். இந்தியா இந்தப் போட்டியை கண்டிப்பாக வெல்ல வேண்டும்”
இதையும் படிங்க: வாசிம் அக்ரமின் சாதனையை உடைத்து புதிய வரலாறு நிகழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ
“இந்த வாய்ப்பு அவர்களுக்கு மீண்டும் கிடைக்காது. இந்தப் பெரிய தொடரில் குல்தீப் மெதுவாக விளையாட வருவார். நானாக இருந்திருந்தால் அர்ஷ்தீப்பை விளையாட வைத்திருப்பேன். ஏனெனில் அவரிடம் வித்தியாசமான ஆங்கில் இருக்கிறது. ஆனால் பரவாயில்லை. நமது அணி நன்றாகவே இருக்கிறது. முதல் போட்டி என்பதால் அவர்கள் கற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்.



