இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக துவக்க வீரராக 17 வயதான மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே மாற்றுவீரராக கொண்டுவரப்பட்டார். அப்படி இந்த தொடரில் விளையாடிய அவர் 7 போட்டிகளில் விளையாடி 34 ரன்கள் சராசரியுடன் 240 ரன்களை குவித்து அசத்தினார்.
ரோஹித் சர்மாவிடம் இருந்து வாழ்த்து பெற்ற ஆயுஷ் மாத்ரே :
அதிலும் குறிப்பாக 189 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவர் சென்னை அணிக்கு புதிய உத்வேகத்தினை அளிக்கக்கூடிய வீரராக பார்க்கப்படுவதால் அவர் இனியும் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. அதோடு இந்த தொடரில் ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் 48 பந்துகளை சந்தித்து 94 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
நடைபெற்று முடிந்த இந்த தொடரில் சர்வதேச பவுலர்களுக்கு எதிராக தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சிஎஸ்கே அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படுகிறார். தற்போது 17 வயதான ஆயுஷ் மாத்ரே அடுத்ததாக அண்டர் 19 அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
அந்த வகையில் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி நாளை ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்து துவங்க இருக்கும் தொடரில் விளையாட இருக்கும் வேளையில் அந்த தொடருக்காக தற்போது அவர் இங்கிலாந்து நாட்டிற்கு பயணித்துள்ளார். அதற்கு முன்னதாக சக மாநில வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவை சந்தித்த அவர் ரோஹித்திடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றதோடு சேர்த்து அவரது கையொப்பமிட்ட பேட்டையும் பரிசாக பெற்றார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள ஆயுஷ் மாத்ரே : “இந்த பேட், வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன் பெறப்பட்டது”. ரோகித் சர்மா அளித்த இந்த பரிசை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என அவருக்கு நன்றி தெரிவித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : உலகின் சிறந்த பும்ராவை அடிக்காமயே எப்படி திணற வைக்கிறேன்னு பாருங்க.. வித்தியாச திட்டம் பற்றி போப் பேட்டி
எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் ஆயுஷ் மாத்ரேவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும் விளையாட இருப்பதால் இந்த தொடர் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



