இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்க இருக்கிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அத்தொடரில் சுப்மன் கில் முதலில் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. அதனால் முதலில் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் சுப்மன் கில் பேட்டிங் டெக்னிக்கில் குறைபாடு இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் நைட் தெரிவித்துள்ளார்.
குறைபாட்டை சரி செய்ங்க:
அதை சரி செய்யாவிட்டால் இடது கை பவுலர்கள் அவரை இங்கிலாந்தில் சிரமப்படுத்துவார்கள் என்றும் நிக் நைட் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் ஐபிஎல் தொடரில் நான் வர்ணனையாளராக செயல்பட்ட போது இதே விஷயத்தை தெரிவித்திருந்தேன். சுப்மன் கில் சில நேரங்களில் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்”
“தன்னுடைய ஃபார்மை பெறுவதற்காக முயற்சி செய்யும் போது சில சமயங்களில் அவருடைய முன்னங்கால் அதிகமாக முன்னே தள்ளி வருகிறது. அப்படி விளையாடும் போது உடலின் சுழற்சியை பயன்படுத்திப் பந்தை முன்னங்காலில் சிறப்பாக அணுகி எதிர்கொள்ள முடியாது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அந்த விஷயத்தில் இன்னும் அவர் முன்னேற்றமடைந்ததை பார்க்கவில்லை”
கேப்டனாக கில் அசத்துவாரா:
“அதனால் இடது கை பவுலர் ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து பவுலிங் செய்யும் பந்துகள் ஸ்விங் ஆகிக்கொண்டு உங்களுடைய காலில் அடிக்கும். எனவே இந்த விஷயத்தில் முன்னேற வேண்டும் என்பது பற்றி சுப்மன் கில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார். முன்னதாக இங்கிலாந்து மண்ணில் சுப்மன் கில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஜாம்பவானாக ஜோ ரூட் நிகழ்த்த இருக்கும் இமாலய சாதனை – விவரம் இதோ
அந்த 3 போட்டிகளில் வெறும் 88 ரன்கள் மட்டுமே அடித்துள்ள அவர் ஒருமுறை கூட அரை சதத்தை அடித்ததில்லை. எனவே இம்முறை எப்படியாவது சுப்மன் கில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை மீண்டும் மோசமாக செயல்பட்டால் அவருடைய கேப்டன்ஷிப் பதவிக்கே ஆபத்து வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



