ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை மிகச் சிறப்பாக பௌலிங் செய்த தென்னாப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா 0, கேமரூன் க்ரீன் 4, லபுஸ்ஷேன் 17, டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 67/4 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் அடித்து கை கொடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
சொதப்பிய தென் ஆப்பிரிக்கா:
அடுத்து விளையாடிய தென்னாபிரிக்கா அணிக்கு மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் ஐடன் மார்க்ரம் 0, ரியான் ரிக்கல்டன் 16, முல்தர் 6, ஸ்டப்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 30/4 என சரிந்த தென்னாப்பிரிக்காவுக்கு நங்கூரமாக விளையாடிய கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய டேவிட் பேடிங்கம் 45 ரன்கள் எடுத்தார்.
அவர்களது ஆட்டத்தால் 126/5 என மீண்டெழுந்த தென்னாபிரிக்கா குறைந்தபட்சம் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக வந்த கெய்ல் வேரின் 13, மார்கோ யான்சென் 0, மகாராஜ் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களை ஆஸ்திரேலியா வந்த வாக்கிலேயே பெவிலியன் திருப்பியது
கமின்ஸ் சாதனை :
அதனால் 138 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. காலம் காலமாக தென்னாப்பிரிக்கா முக்கியமான நேரத்தில் சொதப்பி வெற்றியைக் கோட்டை விட்டதால் சோக்கர் என்ற பட்டத்தை சுமந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போட்டியிலும் 74 ரன்கள் முன்னிலையை கொடுத்துள்ள அந்த அணி வெற்றி பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிதீஷ் ரெட்டியால் நிச்சயமாக இதை செய்ய முடியும்.. அவர் ஒரு பக்கா ஆல்ரவுண்டர் – மோர்னே மோர்கல் கருத்து
மறுபுறம் அபாரமாக பவுலிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த கேப்டன் என்ற இந்திய ஜாம்பவான் பிசன் சிங் பேடியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இம்ரான் கான்: 12
2. ரிச்சி பெனட்: 9
3. பட் கமின்ஸ்: 9*
4. பிஷன் சிங் பேடி: 8
4. கோர்ட்னி வால்ஷ்/ஜேசன் ஹோல்டர்: தலா 7



