இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் இருபதாம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் இந்திய அணியால் இங்கிலாந்தில் வெற்றி காண முடியவில்லை.
இருப்பினும் தற்போது இந்தியா பயமின்றி விளையாடக்கூடிய இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர்கள் அனைவரும் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் நம்பிக்கையுடன் இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது.
சோதிக்க வரும் இந்தியா:
இந்நிலையில் இளம் வீரர்களை வெற்றிக் காணலாம் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ள இந்திய அணி தங்களை மிகவும் சோதிக்கும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை வீழ்த்தி சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கான தரமான வீரர்கள் தங்களிடம் இருப்பதாகவும் மெக்கல்லம் கூறியுள்ளார். எனவே இந்தத் தொடருக்காக காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“எங்களுடைய வீரர்கள் புத்துணர்ச்சி அடைந்து டெஸ்ட் அணியாக ஒன்று சேர்வது முக்கியம். எங்களிடம் சில நம்ப முடியாத தரமான பவுலர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் கிறிஸ் ஓக்ஸ், சாம் குக், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் டாங் போன்ற உயர்தர செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய கலவையான பவுலர்களும் உள்ளார்கள். இது போக ஒவ்வொரு போட்டியிலும் தன்னம்பிக்கையில் வளர்ந்து வரும சோயப் பஷீர் ஸ்பின்னராக இருக்கிறார்”
மெக்கல்லம் நம்பிக்கை:
“இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சோதிக்கப்படுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியா இங்கே நன்றாக தயாராகி வந்துள்ளார்கள். அற்புதமான கிரிக்கெட் நாடான இந்தியா இங்கே மிகவும் உயர்ந்த நம்பிக்கையுடன் வந்துள்ளது. அவர்களுக்கு எதிரான போட்டியை எதிர்கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜேமி ஸ்மித் – பென் டக்கெட் ஆகியோர் ஜாக் கிராவ்லி – டக்கெட் ஜோடியை எனக்கு நினைவுபடுத்துகிறது”
இதையும் படிங்க: பும்ராவால் மட்டும் இது எப்படி முடியுதுனு தெரியல.. நேர்ல பாத்து மிரண்டு போயிட்டேன் – மோர்னே மோர்கல் பூரிப்பு
“எங்களுடைய வீரர்கள் மிகவும் பயமின்றி விளையாடக் கூடியவர்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி லீட்ஸ் நகரில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள்.



