இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2004 – 2019 வரை 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்து மேட்ச் வின்னராக செயல்பட்டார். அதை விட அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையில் இந்தியா 2011 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தமது ஆதரவில் வளர்ந்த விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, தவான் இளம் வீரர்களை வைத்து அவர் 2013 சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவுக்காக வென்றார். அதன் வாயிலாக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையையும் தோனி படைத்தார். 2010ஆம் ஆண்டு அவரது தலைமையில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.
ஐசிசி கெளரவம்:
அந்த வகையில் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்ட தோனி மகத்தான ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். இந்நிலையில் இந்தியாவின் எம்எஸ் தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற கௌரவ பட்டம் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு.
“அழுத்தமான தருணங்களில் அவருடைய அமைதிக்காகவும் ஒப்பிட முடியாத தந்திரோபாய திட்டங்களுக்காகவும் கொண்டாடப்படுபவர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஃபினிஷர்கள், கேப்டன்கள், விக்கெட் கீப்பர்களில் ஒருவரான எம்எஸ் தோனி பாரம்பரியமிக்க ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்து கௌரவிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
11வது இந்தியர்:
இதன் வாயிலாக ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வெல்லும் 11வது இந்தியர் சாதனையை தோனி படைத்துள்ளார். பிஷன் சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர் (2009) ஆகியோர் முதல் முறையாக அந்த கௌரவத்தைப் பெற்றனர். 2015இல் அனில் கும்ப்ளே, 2018இல் ராகுல் டிராவிட், 2019இல் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதையும் படிங்க: 268/7 டூ 417/7 ரன்ஸ்.. 439 டார்கெட்.. இங்கிலாந்து லயன்ஸ்’க்கு தண்ணி காட்டிய மும்பை ஜோடி.. இந்தியா ஏ அபாரம்
2021இல் வினோத் மன்கட், 2023இல் டயானா எடுல்ஜி, விரேந்தர் சேவாக், 2024இல் நீத்து டேவிட் ஐசிசி ஹால் ஆஃப் பேம் கௌரவத்தைப் பெற்றார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது தோனி இந்த உருவத்தை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அவருடன் சேர்த்து தென்னாபிரிக்க ஜாம்பவான்கள் ஹாசிம் அம்லா, கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஹைடன், நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கும் இந்த கௌரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



