இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில் தலைமையில் 18 பேர் கொண்ட வீரர்களின் முழு பட்டியலையும் வெளியிட்டது.
5 ஆவது இந்திய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நிகழ்த்தவுள்ள சாதனை :
அதோடு இந்திய அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்தும், சில வீரர்கள் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டது குறித்தும் தெளிவான விவரங்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழு முறையாக வெளியிட்டிருந்தது. ஆனாலும் இந்த இந்திய அணியின் தேர்வு குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் தற்போது ஐந்தாவது இந்திய டெஸ்ட் கேப்டனாக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக விராட் கோலியை பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாம் இடத்தை பிடிக்கவுள்ளது குறித்த தகவலும் வெளியாகி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லுக்கு 25 வயது தான் ஆகிறது.
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது அவர் முறைப்படி கேப்டன் பதவி ஏற்கையில் 25 வயது 285 நாட்கள் இருக்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற ஐந்தாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார்.
இந்த பட்டியலில் மிக இளம் வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றவர் என்ற சாதனையில் மன்சூர் அலிகான் பட்டோடி தனது 21 வது வயதில் இந்திய டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுல்கர் 23 வயதிலும், கபில் தேவ் 24 வயதிலும், ரவி சாஸ்திரி 25 வயதிலும் டெஸ்ட் கேப்டன்சி பதவியை ஏற்று அடுத்தடுத்த முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : சிஎஸ்கே, மும்பையிடம் உதவி கேட்டு வரும் ஆர்சிபி.. பிளே ஆஃப் சுற்றுக்கு முன் உருவான புதிய பரிதாபம்
இவ்வேளையில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு சுப்மன் கில் வந்துள்ளார். இந்த பட்டியலில் கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராத் கோலி தனது 26-வது வயதில் டெஸ்ட் கேப்டன்சியை பெற்றுள்ளதன் மூலம் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த 2022-ஆம் ஆண்டு ரோகித் சர்மா தனது 35-ஆவது வயதில் தான் டெஸ்ட் கேப்டன்சியை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



