இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஜஸ்ப்ரித் பும்ரா தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது பல ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதே போல ஷமி கழற்றி விடப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவை அனைத்தையும் விட இளம் வீரர் சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடி வந்த அவர் ஒரு வழியாக கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த அவர் கடந்த நியூசிலாந்து தொடரில் பெங்களூரு போட்டியில் தனி ஒருவனாக சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
சர்பராஸ் கான் நீக்கம்:
அப்படிப்பட்ட அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு நீண்ட காலமாக கம்பேக் கொடுப்பதற்காக போராடி வரும் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த முடிவு ஒருவருக்கு நியாயமாகவும் மற்றொருவருக்கு அநியாயமாகவும் தெரியலாம். தற்சமயத்தில் கருண் நாயர் உள்ளூரில் நிறைய ரன்கள் குவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் கவுன்டி தொடரிலும் கொஞ்சம் விளையாடியுள்ளார். சில நேரங்களில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த சர்பராஸ் கான் பின்னர் ரன்கள் குவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்”
கருண் நாயர் சேர்ப்பு:
“சில நேரங்களில் இது போன்ற முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்கிறார்கள். தற்சமயத்தில் கருண் நாயர் உள்ளூரில் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அது போக இங்கிலாந்து மண்ணில் கவுன்டி தொடரில் விளையாடியுள்ளார். மறுபுறம் விராட் கோலி போன்ற அனுபவம் மிக்கவர் இந்திய அணியில் இல்லை”
இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்தது ஏன்? – அஜித் அகார்கர் விளக்கம்
“அதனால் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியில் அனுபவம் ரீதியாக நாம் பின்தங்கியுள்ளோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது போன்ற சூழ்நிலையில் கருண் நாயர் அனுபவம் உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்” எனக் கூறினார். அவர் கூறுவது போல சர்பராஸ் கான் முதல் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் ரன்கள் அடிக்கவில்லை. அது போக கவுன்ட்டி தொடரிலும் விளையாடாதது அவருடைய வாய்ப்பைப் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



