இப்படியா காலை வருவீங்க.. 2008க்குப்பின் 2வது சிஎஸ்கே ஜோடியாக ஆயுஷ் – கான்வே மோசமான சாதனை

CSK Opening Pair
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 57வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை போராடி தோற்கடித்தது. மே 7ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 48, மணிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர்.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய சென்னைக்கு உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 31 (11) ரன்கள் விளாசினார். ஆனால் ஆயுஷ் மாத்ரே 0, கான்வே 0, அஸ்வின் 8, ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 60/5 என சரிந்த சிஎஸ்கே மீண்டும் தோல்வியை சந்திக்கும் என்று நம்பப்பட்டது.

- Advertisement -

ஏமாற்றிய புதிய ஜோடி:

ஆனால் அப்போது ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்த தேவால்ட் ப்ரேவிஸ் மொத்தம் 52 (25) ரன்கள் விளாசி போட்டியை தலைகீழாக மாற்றினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சிவம் துபே 45 (40) ரன்கள் எடுத்தார். இறுதியில் தோனி 14*, கம்போஜ் 4* ரன்கள் அடித்து கடைசி ஓவரில் சென்னைக்கு 3வது வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

மறுபுறம் வைபவ் அரோரோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் போராடித் தோற்ற கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டது. முன்னதாக இந்த வருடம் சென்னை அணி பவர் பிளே ஓவர்களில் அதிரடிக் காட்ட முடியாமல் விக்கெட்டுகளை இழப்பதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதை மாற்றுவதற்காக சாய்க் ரசித் – ஆயுஷ் மாத்ரே ஜோடியை சிஎஸ்கே அறிமுகப்படுத்தியது.

- Advertisement -

2008க்குப்பின் மோசமான சாதனை:

அதில் ஆயுஷ் சிறப்பாக விளையாடிய போதிலும் ரசித் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் இப்போட்டியில் அவருக்கு பதிலாக அனுபவ நியூஸிலாந்து வீரர் டேவோன் கான்வேவுக்கு மீண்டும் தோனி வாய்ப்பு வழங்கினார். இந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் வைபவ் ஆராரோ வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டானார்.

இதையும் படிங்க: ஒரே போட்டியில் ஃபினிஷராக 100, கீப்பராக 200.. ஐபிஎல் தொடரில் தல தோனி படைத்த 2 சரித்திர சாதனை

மொய்ன் அலி வீசிய அடுத்த ஓவரில் டேவோன் கான்வேயும் டக் அவுட்டாகி காலை வாரினார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 2008க்குப்பின் 18 வருடங்கள் கழித்து ஒரே போட்டியில் ஜோடியாக டக் அவுட்டான சிஎஸ்கே ஓப்பனிங் ஜோடி என்ற மோசமான சாதனையை ஆயுஷ் – கான்வே படைத்துள்ளனர். இதற்கு முன் முதலும் கடைசியுமாக 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் பார்திவ் படேல் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஜோடியாக சோஹைல் தன்வீரிடம் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்தனர்.

Advertisement