இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 9 தோல்விகளை பெற்று பிளேஆப் சுற்றிற்கான வாய்ப்பை இழந்தது .இன்னும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணியால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதால் இந்த தொடர் படுமோசமான தொடராக மாறியுள்ளது.
சி.எஸ்.கே அணிக்குள் வந்த 26 வயது வீரர் :
இப்படி சென்னை அணி மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு மெகா ஏலத்தின் போது அவர்கள் தேர்வு செய்த வீரர்களே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மற்ற அணிகள் எல்லாம் துடிப்பான இளம் வீரர்களை எடுத்திருந்த வேளையில் சிஎஸ்கே அணி மட்டும் டி20 ஃபார்மேட்டிற்கு செட்டாகாத பல வீரர்களை எடுத்ததாக ரசிகர்கள் நேரடியாகவே விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடைசி சில போட்டிகளாகவே பல்வேறு மாற்றங்களை செய்து வரும் சென்னை அணி ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ். ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நிச்சயம் சென்னை அணியில் பல இளம் வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அணியில் இணைந்திருந்த வன்ஷ் பேடி தற்போது காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறவே அவருக்கு பதிலாக 26 வயதான இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் பட்டேலை சென்னை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் 28 பந்துகளில் சதம் அடித்து வியக்க வைத்திருந்தார். எனவே அவரது திறமையை கருத்தில் கொண்டு சென்னை அணி அவரை மாற்று வீரராக அணியில் இணைத்துள்ளது.
இதையும் படிங்க : கிங் இருக்க ஆர்சிபி’க்கு பயமில்ல.. சிஎஸ்கே’வை கோலி நொறுக்கியதை பாத்து சாப்பிடுங்க.. ஏபிடி பதிலடி
சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலாக தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரை கொண்டு வந்துள்ளது. இனிவரும் சில போட்டிகளில் வாய்ப்புகளை அவருக்கு வழங்கி அதில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடர்ச்சியாக அவர் அணியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



