ஐபிஎல் 2025 தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அதில் பெங்களூரு தங்களுடைய சொந்த மண்ணில் ராஜஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 205 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 49, சூர்யவன்சி 16, கேப்டன் ரியான் பராக் 22 ரன்களை அடித்ததால் ஒரு கட்டத்தில் 110/2 என்ற நல்ல நிலையில் இருந்தது.
ஆனால் கடைசி 10 ஓவரில் அபாரமாக பௌலிங் வீசிய பெங்களூரு அணி ராஜஸ்தானை 194/4 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரேல் 47 ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினர். அந்தத் தோல்விக்கு 10 ஓவர்களுக்குப் பின் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ரியான் பராக் போட்டியின் முடிவில் கூறினார்.
14 ஒய்ட் ரன்ஸ்:
இந்நிலையில் 110/2 என்ற நல்ல நிலையில் இருந்த போது ரியான் பராக் தேவையற்ற ஷாட்டை அடித்து விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு வித்திட்டதாக அமைந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அதை மறைப்பதற்கு மற்ற வீரர்களை குறை சொல்லக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும் ராஜஸ்தான் 14 ஒய்ட் பந்துகளை வீசாமல் இருந்திருந்தால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் மிஸ்ரா பேசியது பின்வருமாறு. “முக்கியமான நேரத்தில் உங்களுக்கு நீங்களே தவறு செய்தீர்கள். அதை சொல்லாமல் எப்படி மற்றவர்களை குறை சொல்லலாம். நீங்கள் ஒன்றும் 40 – 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்கவில்லை. நெருக்கமான போட்டியில் தோல்வியை சந்தித்தீர்கள்”
மிஸ்ரா, சேவாக் சாடல்:
“ஒருவேளை நீங்கள் தவறான நேரத்தில் அவுட்டாகாமல் விளையாடிருந்தால் ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றி பெற்றிருப்பீர்கள். கேப்டனாக நீங்கள் தான் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று முடித்திருக்க வேண்டும். வெற்றி உங்களது கையில் இருந்தும் விட்டு விட்டீர்கள். நீங்கள் 14 ஒய்ட் ரன்களை கொடுக்காமல் இருந்திருந்தால் ராஜஸ்தான் வென்றிருக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கோயங்கா தான் இதை செஞ்சாரா? அவரை பெயருக்கு கேப்டனா வெச்சிருந்தா ஜெய்க்க முடியுமா? ஹர்பஜன் சாடல்
அதே நிகழ்ச்சியில் வீரேந்திர சேவாக். “ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவ்வளவு மோசமாக ஒன்றும் விளையாடவில்லை. சொல்லப்போனால் அவர்கள் 4 ஓவரில் 31 ரன்கள் அடித்தனர். ஜுரேல் – ஹெட்மேயர் களத்தில் இருந்த வரை வெற்றி அவர்கள் பக்கம் இருந்தது. துரதிஷ்டவசமாக அவர்கள் அவுட்டானார்கள். ஜுரேல் இழுத்து அடிக்க முயற்சித்து இன்சைட் எட்ஜ் வாங்கி விக்கெட்டை இழந்தார். ஒருவேளை அவர் கடைசி வரை விளையாடிருந்தால் ராஜஸ்தான் வென்றிருக்கும்” எனக் கூறினார்.



