ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சில வெளிநாட்டு வீரர்கள் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாறி வருகிறார்கள். அதில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் கிளன் மேக்ஸ்வெல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அந்த அணிக்காக அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்து வருகிறார்.
சமீபத்திய வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் தடுமாறும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அசத்தி வருகிறார். 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காயத்தையும் தாண்டி இரட்டை சதத்தை அடித்த மேக்ஸ்வெல் மிரட்டலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. அதனால் அவரை பஞ்சாப் கிங்ஸ் 4.20 கோடி என்ற நல்ல தொகைக்கு வாங்கியது.
இந்தியாவில் ஹாலிடே:
அந்த வாய்ப்பில் இதுவரை மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் வெறும் 41 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதே போல இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டன் 8.75 கோடி என்ற பெரிய தொகைக்கு பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் இதுவரை 7 போட்டிகளில் அவர் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பலாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் மேக்ஸ்வெல்,, லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவுக்கு வரவில்லை என்று வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். மாறாக ஐபிஎல் சம்பளத்தை பெற்று ஜாலியாக பொழுதுபோக்க வருவதாகவும் சேவாக் சாடியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
சேவாக் விளாசல்:
“மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் இனியும் வெற்றிக்கான பசி இல்லை. அவர்கள் இந்தியாவிற்கு தங்களுடைய விடுமுறையை கழிக்க வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய அணியை விரும்பி அணிக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. இதுவரை தங்களுடைய அணி வெல்லாத ஐபிஎல் கோப்பையை இம்முறை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் விளையாடுவதாக தெரியவில்லை”
இதையும் படிங்க: தவான், கோலி, வார்னர் ஆகியோரது சாதனையை சமன் செய்த ஹிட்மேன்.. சி.எஸ்.கே அணிக்கெதிராக – தரமான சம்பவம்
“நான் ஏராளமான வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடியுள்ளேன். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றிக்கான பசி இருக்கும். ஆனால் இந்த வீரர்கள் பேச்சு மட்டுமே. செயல்பாடுகளில் எதுவும் காண்பிப்பதில்லை. டேவிட் வார்னர், டீ வில்லியர்ஸ், மெக்ராத் ஆகிய மூவர் மட்டுமே உங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். மற்ற படி வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வீரர்கள் செமி ஃபைனல் முடிந்ததும் பார்ட்டி எப்போது? என்று என்னிடம் கேட்டார்கள். அப்போது தான் யார் கோப்பையை வெல்ல வந்தார்கள் யார் பொழுதுபோக்க வந்தார்கள் என்பது தெரிந்தது” எனக் கூறினார்.



