ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தற்போது பஞ்சாப் அணியானது 7 போட்டியில் 5 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய வரலாற்று சாதனை :
அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் தற்போது நான்காவது இடத்தில் தொடர்கிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே மழை பெய்ததால் போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பின்னர் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 50 ரன்களையும், ரஜத் பட்டிதார் 23 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 96 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக நேஹல் வதேரா 33 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 2 விக்கெட்டுகள் மூலம் ஐபில் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : பவுலர்ஸ் என்றாலே ஏமாளியா? இதை மாத்துங்க.. அவங்க தவறுக்கு நாங்க தான் கிடைச்சோமா? வருண் கோரிக்கை
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை அந்த அணிக்காக 72 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக பியூஸ் சாவ்லா பஞ்சாப் அணிக்காக 84 விக்கெட் எடுத்து முதலிடத்தில் இருந்தார். அவரது இந்த சாதனையை தற்போது அர்ஷ்தீப் சிங் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



