ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்பூரில் 28வது போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ஜெய்ஸ்வால் 75, ரியான் பராக் 30, துருவ் ஜுரேல் 35* ரன்களை எடுத்த உதவியுடன் 174 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய பெங்களூரு ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 17.3 ஓவரில் 175-1 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. அந்த அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அதைப் பயன்படுத்திய விராட் கோலி நங்கூரமாக விளையாடி 62* ரன்கள் எடுத்தார்.
ஆட்டநாயகன் சால்ட்:
இறுதியில் தேவ்தூத் படிக்கல் 40* ரன்கள் எடுத்து பெங்களூரு தங்களது நான்காவது வெற்றியைப் பெற்றது. மறுபுறம் சொந்த மண்ணில் தடுமாற்றமாக விளையாடிய ராஜஸ்தான் தங்களது நான்காவது தோல்வியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 65 ரன்கள் வித்திட்ட சால்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்
குறிப்பாக தங்கள் நாட்டைச் சேர்ந்த 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஜோப்ரா ஆர்ச்சரை அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிர்கொண்டு அசத்தினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வலைப்பயிற்சியில் அதிகம் எதிர்கொண்டுள்ளதால் ஆர்ச்சரை எதிர்கொள்வது தமக்கு தூசி போன்றது என்ற வகையில் சால்ட் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய பவுலர்களால் இந்த வெற்றி எளிதாக கிடைத்ததாக கூறும் அவர் பேசியது பின்வருமாறு.
ஆர்ச்சருக்கு அடி:
“வெற்றியில் பங்காற்றுவது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த மைதானம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதில் எங்களுடைய அணிக்காக நான் முத்திரை பதித்ததில் மகிழ்ச்சி. ஆர்ச்சருக்கு ஆரம்பத்திலேயே நான் வாய்ப்புகளைக் கொடுத்தேன். அவருக்கு எதிராக ஆஃப் சைட் திசையில் அடிக்க முயற்சித்தேன். ஆனால் அவர் பந்தை அதிகம் ஸ்விங் செய்ததால் அவருக்கு எதிராக மைதானத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். ஜோப்ராவும் நானும் வலைப்பயிற்சியில் நிறைய போட்டியைக் கொண்டுள்ளோம்”
இதையும் படிங்க: தொடரும் ரோஹித் சர்மாவின் சோகம்.. டெல்லி போட்டியிலும் ரசிகர்கள் ஏமாற்றம் – என்னதான் ஆச்சு உங்களுக்கு ஹிட்மேன்
“மற்றவர்களை காட்டிலும் எனக்கு எதிராக அவர் நிறைய பந்துகளை வீசியுள்ளார். அதே போல மற்றவர்களைக் காட்டிலும் அவரை நான் அதிகமாக எதிர்கொண்டுள்ளேன். எனவே இன்று அவர் மீது கட்டையை போட்டது நன்றாக இருந்தது. பிட்ச் ஸ்லோவாக லோவாக இருந்தது. அதில் பவர் பிளேவை பயன்படுத்தி நான் எனது முத்திரையைப் பதித்தேன். ராஜஸ்தான் கொஞ்சம் நன்றாகவே விளையாடியது. எங்களுடைய பவுலர்கள் அவர்களுக்கு எதிராக திட்டங்களை சரியாக செயல்படுத்தினர். எதிரணி நல்ல ஸ்கோர் எடுத்தும் நாங்கள் பேட்டிங்கில் செயல்படுத்தியது வேலை செய்தது” என்று கூறினார்.



