இந்திய கிரிக்கெட் அணிக்காக 2003 உலகக் கோப்பையில் விளையாடிய சௌரவ் கங்குலி தலைமையிலான வீரர்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தோனி தலைமையில் 2011 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் இருந்த வீரர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருமே களத்தில் ஒன்றாக ஒரு குடும்பத்தைப் போல நாட்டுக்காக விளையாடி வெற்றிகளில் பங்காற்றியவர்கள்.
இந்நிலையில் கடந்தக் காலங்களில் விளையாடிய எந்த வீரர்களுடன் இணைந்து விளையாட விரும்புகிறீர்கள் என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, யுவராஜ் ஆகிய நால்வருடன் விளையாட விரும்புவதாக தோனி ஆவலுடன் தெரிவித்தார். மேலும் 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததை மறக்க முடியாது என்றும் தோனி கூறியுள்ளார்.
தோனியின் தேர்வு:
அப்படிப்பட்ட இந்திய அணியின் மேட்ச் வின்னர்களுடன் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சேர்ந்து விளையாட விரும்புவதாக தோனி கூறியுள்ளார். இது பற்றி ராஜ் ஷாமணி எனும் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நான் எனது இந்திய வீரர்களுடன் விளையாட விரும்புகிறேன். வீரு பா (சேவாக்) ஆட்டத்தை துவங்கினால் நன்றாக இருக்கும். அவருடன் சச்சின், தாதா (கங்குலி) ஆகியோருடன் விளையாட வேண்டும்”
“அவர்கள் தங்களது உச்சத்தில் இருக்கும் போது விளையாடுவதை கற்பனை செய்துப் பாருங்கள். அவர்கள் விளையாடுவதைப் பார்க்கும் போது அவர்களைப் போல் யாருமே இல்லை என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் கிரிக்கெட்டில் எப்போதும் மேடு பள்ளங்கள் இருந்துக் கொண்டே இருக்கும். எனவே அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது கடினமானது”
மீண்டும் விளையாட ஆசை:
“ஆனால் நாம் வளரும் போது இந்த வீரர்கள் அனைவருமே சிறப்பாக விளையாடுவதைப் பார்த்துள்ளோம். யுவ்ராஜ் 6 சிக்ஸர்கள் அடிக்கும் போது நீங்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று உங்களுக்குத் தெரியும். எனவே விஷயம் என்னவெனில் நான் அவர்களில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும்? அனைவரையும் தேர்ந்தெடுக்க முடியாது”
இதையும் படிங்க: இன்னும் 17 ரன் தான் தேவை.. டி20 வரலாற்றில் முதல் இந்திய வீரராக விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ
“அவர்கள் அனைவருமே இந்தியாவுக்காக பங்களித்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கு விளையாடினாலும் பல போட்டிகளில் வெற்றிப் பெறுவதை அவர்கள் அனைவரும் உதவி செய்தனர் என்பது உங்களுக்கு தெரியும்” எனக் கூறினார். மொத்தத்தில் அந்த ஜாம்பவான் வீரர்கள் அனைவருமே ஓய்வு பெற்று விட்ட நிலையில் தோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் 43 வயதில் விளையாடி வருகிறார்.



