ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான சென்னை மும்பை அணிகள் மோதிய போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. முன்னதாக அந்தப் போட்டியில் முதலாவதாக விளையாடிய மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் 2023 உலகக்கோப்பை முதலில் பவர் பிளே ஓவர்களில் தனது சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் அவர் எதிரணிகளை அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நல்லத் துவக்கத்தை கொடுத்தார். அந்த அணுகுமுறையை பின்பற்றிய அவர் கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனையும் படைத்தார். அப்படிப்பட்ட அவர் இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே கலீல் அஹ்மத் வீசிய 4வது பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட்டாகி மும்பைக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஸ்ரீகாந்த் அதிருப்தி:
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் ரோஹித் படைத்தார். இந்நிலையில் அவரது ஆட்டம் பற்றி முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்தது பின்வருமாறு. “டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். ஆனால் அதற்கு முன்பாக அவர் தனது பேட்டின் நடுவே சில பந்துகள் அடிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்”
“அதாவது முதலில் சில பந்துகள் பேட்டின் நடுவே அடித்து விட்டு பின்னர் அதிரடிக்குச் செல்லுங்கள். அவ்வாறு செய்யாத போது உங்களால் பந்தை சரியாக டைமிங் செய்ய முடியாது. டைமிங் சரியாக பெற்றதும் அதிரடிக்குச் செல்லுங்கள்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய ஷேன் வாட்சன் பிட்ச் எப்படி இருக்கிறது என்று தெரியாத நிலையில் ரோஹித் முதல் 6 பந்துகள் கணித்து விளையாடியிருக்க வேண்டுமென கூறியுள்ளார்.
2017 வீக்னெஸ்:
மேலும் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முதலே முகமது அமீர, ட்ரெண்ட் போல்ட் போன்ற இடது கை பவுலர்களுக்கு எதிராக ரோகித் பலவீனத்தை கொண்டுள்ளார். அதில் இன்னும் முன்னேறாத அவர் கலீல் அஹ்மதிடம் தனது விக்கெட்டை கொடுத்தது பற்றி வாட்சன் பேசியது பின்வருமாறு. “பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் குறைந்தபட்சம் நீங்கள் 6 பந்துகளை எதிர்கொண்டு சூழ்நிலையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: அது எனக்கே பயமா இருக்கு.. யார் வந்தாலும் நொறுக்கி கோப்பை வெல்ல ப்ளூபிரிண்ட் ரெடி.. கமின்ஸ் எச்சரிக்கை
“துரதிஷ்டவசமாக அதை செய்யாமல் அவுட்டான ரோகித்தை கடந்த காலங்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து தடுமாற வைத்துள்ளார்கள் என்பதில் கேள்வியில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் போது ரோஹித் அவர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடலாம். ஆனால் இன்று அதிரடியாக விளையாடலாமா அல்லது பொறுமை காக்கலாமா என்பது அவருக்கு தெரியவில்லை” என்று கூறினார்.



