ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுகள் (9) எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காத அவரை இந்திய அணி கழற்றி விட்டது.
தற்போது அதே துபாயில் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நாயகனாக மாறியுள்ளார். இந்நிலையில் 2021இல் சந்தித்த கருப்பு நாட்களை தாண்டி தற்போது இந்திய அணியில் கம்பேக் கொடுத்தது பற்றி கோபிநாத் யூடியூப் சேனலில் வருண் சக்கரவர்த்தி விரிவான பேட்டி கொடுத்துள்ளார். அதில் வருண் தெரிவித்த முக்கியமான விவரம் பின்வருமாறு.
சோதனையும் சாதனையும்:
“அது (2021) எனக்கு இருண்ட நேரமாக இருந்தது. நான் மன உளைச்சலில் இருந்தேன். ஏனெனில் நிறைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட என்னால் அந்த வாய்ப்பை நியாயப்படுத்த முடியவில்லை. ஒரு விக்கெட் கூட எடுக்காததற்காக வருந்தினேன். பின்னர் 3 வருடங்கள் வாய்ப்பு கிடைக்காததால் இந்திய அணியில் அறிமுகமானதை விட மீண்டும் திரும்புவது கடினம் என்று நினைத்தேன்”
“அந்தக் காலகட்டங்களில் எனது தினசரி வாழ்க்கை உட்பட பல்வேறு விஷயங்களை மாற்ற வேண்டி இருந்தது. முன்பெல்லாம் ஒரு செஷனில் 50 பந்துகள் மட்டுமே பயிற்சிகளை எடுத்த நான் அதை இரட்டிப்பாக வேண்டியிருந்தது. இந்திய அணிக்காக விளையாட தேர்வாளர்கள் அழைப்பார்களா? என்பது தெரியாமலேயே இருந்தது மிகவும் கடினமாக இருந்தது. 3 வருடங்கள் கழித்து அனைத்தும் முடிந்து விட்டதாக நான் நினைத்தேன்”
போராடி கம்பேக்:
“இருப்பினும் ஐபிஎல் கோப்பையை வென்ற போது மீண்டும் விளையாட அழைப்பு வந்தது. அதன் பின் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் அனைத்து நல்ல விஷயங்களும் ஒரே எடுப்பில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 2021 உலகக்கோப்பை முடிந்த பின் இந்திய அணிக்கு மீண்டும் விளையாட வராதீர்கள், உங்களால் முயற்சித்தாலும் அது முடியாது என்ற வகையில் எனக்கு மிரட்டலான அழைப்புகள் வந்தன”
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 3 திறமை.. ஆஸ்திரேலியா லெவலுக்கு இந்தியா முன்னேற ஐபிஎல் தான் காரணம்.. டிகே பேட்டி
“சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து கண்காணித்ததால் ஒளிந்து கொண்டேன். விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்த போது சிலர் தங்களது பைக்கில் என்னை பின்தொடர்ந்தனர். அவ்வாறு நடப்பது சகஜம். ரசிகர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அப்படிப்பட்ட எனக்கு தற்போது பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது” என்று கூறினார்.



