ஹாட்ரிக் ஃபைனல்.. 4க்கு 4.. ஐசிசி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியா இரட்டை உலக சாதனை

Team India
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அதில் வலுவான உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு விராட் கோலி 84, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ராகுல் 42* ரன்கள் எடுத்து 48.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை இந்தத் தொடரிலிருந்து நாக் அவுட் செய்த இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. மேலும் இந்தத் தொடரின் ஃபைனலுக்கு முதல் அணியாகவும் இந்தியா தகுதி பெற்றது.

- Advertisement -

ஹாட்ரிக் உலக சாதனை:

ஏற்கனவே 2013 சாம்பியன்ஸ் டிராஃபியில் தோனி தலைமையில் ஃபைனலுக்குச் சென்ற இந்தியா கோப்பையையும் வென்றது. பின்னர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி தலைமையில் ஃபைனலுக்குச் சென்ற இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் ஃபைனலுக்கு சென்றுள்ளது. இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் தொடர்ந்து 3 தொடர்களில் (2013, 2017, 2025) ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற ஹாட்ரிக் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன் இந்தியாவைத் தவிர்த்து ஆஸ்திரேலியா உட்பட உலகின் வேறு எந்த அணியும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 3 முறை தொடர்ந்து ஃபைனலுக்கு தகுதி பெற்றதில்லை. இது போக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதிப் பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற 2023 உலகக்கோப்பை ஃபைனலுக்கும் தகுதி பெற்றது. அதன் பின் நடந்த 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்திய சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

4க்கு 4 ஃபைனல் சாதனை:

அதற்கடுத்ததாக தற்போது நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் கடைசியாக நடைபெற்ற 4 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி ஃபைனலுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக 4 ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: 12 வெற்றிகள்.. தோனியை சமன் செய்த ரோஹித் சர்மா.. தோனி உட்பட எந்த கேப்டனும் செய்யாத உலக சாதனை

இதற்கு முன் 1975 – 1983 காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ், 2000 – 2003 காலகட்டங்களில் இந்தியா, 2019 – 2021 காலகட்டங்களில் நியூசிலாந்து அணிகள் தலா 3 ஃபைனலுக்கு தொடர்ந்து தகுதி பெற்றதே முந்தைய சாதனை. இதிலிருந்து மற்ற அணிகளை காட்டிலும் இந்திய ஐசிசி தொடர்களில் நன்றாக செயல்படுவது தெரிகிறது. இப்படி வெற்றி நடை போடும் இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement