இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. நாக்பூரில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் 19/2 என இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றமாக விளையாடியது.
அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (36) ரன்கள் விளாசி அவுட்டானார். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அடுத்தடுத்த சிக்சர்களைப் பறக்க விட்ட அவர் போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கி வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அந்தப் போட்டியில் தமக்கு உண்மையாக வாய்ப்பு கொடுக்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டிருந்ததாக போட்டியின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
4இல் 500 ரன்ஸ்:
இருப்பினும் விராட் கோலி முழங்காலில் காயத்தை சந்தித்த காரணத்தால் மட்டுமே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார். அந்த செய்தி சில முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் நான்காவது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன் வாயிலாக ஒரு உலகக் கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் யுவராஜ் உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரர்களும் அந்தச் சாதனையை படைத்ததில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவரை இந்திய அணி பெஞ்சில் அமர வைக்க நினைப்பது தமக்குப் புரியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையா:
இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை கோலி ஃபிட்டாக இருந்தால் ஐயருக்கு அணியில் இடமில்லை என்ற விவரம் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஏனெனில் அவர் உலகக் கோப்பையில் நான்காவது இடத்தில் 500 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர். அப்படிப்பட்ட அவரை நீங்கள் எப்படி பெஞ்சில் அமர வைக்க முடியும்?”
இதையும் படிங்க: உலகில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ
“ஒருவேளை அவர் விளையாடவில்லையெனில் விராட் கோலி எங்கே விளையாடுவார்? கில் 4வது இடத்தில் விளையாடப் போவதில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கட்டாக் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஸ்ரேயாஸ் தொடர்வாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



