ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. அதோடு கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
பும்ராவை மாதிரி எந்த பவுலரும் வரமாட்டாங்க :
இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலே இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா 32 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதினை வென்றிருந்தார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு 13 பந்துக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தலான ஸ்பெல்லை வெளிப்படுத்தியிருந்தார். இந்த தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பும்ரா ஏற்கனவே டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள வேளையில் அவருக்கான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் பும்ராவின் பந்துவீச்சை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிடுகையில் : பும்ரா போன்று எந்த ஒரு வீரராலும் ஆஸ்திரேலிய அணியை இப்படி அசைத்துப் பார்த்திருக்க முடியாது. தனி ஒருவராக இந்த தொடரில் அவர் ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்துள்ளார்.
இவரைப் போன்ற ஒரு ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளரை பார்ப்பது மிகவும் கடினம். ஆஸ்திரேலிய வீரர்களே பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்று இந்த தொடரின் முடிவில் கூடியிருந்தனர். அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சு இந்த தொடரில் அற்புதமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பும்ராவின் காயம் எப்படி இருக்கிறது? சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடுவாரா? – பி.சி.சி.சி சார்பில் வெளியான தகவல்
சிட்னி டெஸ்ட் போட்டியின் போது இரண்டாம் நாள் அன்று முதுகு தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீசவில்லை எனவே அவர் காயத்தில் இருந்து எப்போது மீண்டு வருவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



