ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியுள்ளது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது. அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
குறிப்பாக கடந்த முறை காபா மைதானத்தில் 89* ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் இம்முறை சுமாராக விளையாடி தன்னுடைய விக்கெட்டை பரிசளித்து வருகிறார். அதனால் அவரை ஸ்டுப்பிட் முட்டாள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நேரலையில் கடுமையாக விமர்சித்தார். அந்த சூழ்நிலையில் 4வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடிய பண்ட் 30 (104) ரன்கள் குவித்து நன்கு செட்டிலானார்.
விமர்சிக்க வேண்டாம்:
ஆனால் அப்போது டிராவிஸ் ஹெட் போன்ற பகுதி நேர பவுலரிடம் இறங்கி சென்று அடித்த அவர் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. அதன் காரணமாக ரசிகர்கள் அவரை மீண்டும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ரிஷப் பண்ட் பெரிய ரன்கள் எடுக்காததற்கு விமர்சியுங்கள் ஆனால் அவர் அவுட்டாகும் விதத்தை விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ரிஷப் பண்ட் 104 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக விளையாடி பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்து தான் அவுட்டானதாக அவர் கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் அவர் சில மகத்தான வெற்றிகளை ஏற்கனவே பெற்றுக் கொடுத்துள்ளதை மறந்திட வேண்டாம் என்றும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
மஞ்ரேக்கர் ஆதரவு:
“ரிஷப் பண்ட் தன்னுடைய தோல்விகளுக்காக மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டும். எப்படி தோல்வியை சந்திக்கிறார் என்பதற்காக விமர்சிக்கப்படக்கூடாது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 என்ற நல்ல சராசரியை கொண்டுள்ள அவர் குறைந்தது இந்தியர் விளையாடிய 3 மகத்தான இன்னிங்ஸ்களை விளையாடி இருப்பார். 42 போட்டிகளில் அவர் 6 சதங்கள் மற்றும் 7 முறை 90கள் எடுத்துள்ளார்”
இதையும் படிங்க: நான் முன்பை மாதிரி அவ்ளோ ஃபிட்டா இல்ல.. அதற்காக நிறைய உழைக்கிறேன் – தல தோனி ஓபன்டாக்
“அந்த வகையில் அவர் சிறப்பான வீரர். ஆனால் போதுமான அளவுக்கு தொடர்ந்து ரன்கள் அடிப்பதில்லை என்பது மட்டுமே பிரச்சனை” எனக் கூறினார். இதை அடுத்து கடைசி போட்டி சிட்னி நகரில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியிலாவது வென்று குறைந்தபட்சம் தொடரை இந்தியா சமன் செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.



