ஹர்பஜனிடம் செஞ்சதை மறந்துட்டு விராட் கோலியை விமர்சிக்கலாமா? பாண்டிங்கிற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

Ricky Ponting 2
- Advertisement -

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 311-6 ரன்கள் எடுத்துள்ளது. சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 52, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.

இந்திய அணிக்கு இதுவரை அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் ஆரம்பத்திலேயே பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டார். குறிப்பாக 3 வருடங்கள் கழித்து அவருக்கு எதிராக சிக்சர் அடித்த கோன்ஸ்டஸ் ஒரே ஓவரில் 18 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

- Advertisement -

விமர்சித்த பாண்டிங்:

அதன் காரணமாக அதிருப்தியடைந்த விராட் கோலி 10வது ஓவரின் முடிவில் ஓவர் மாற்றும் போது அவருடைய தோளில் இடித்தார். அது பற்றி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “விராட் கோலி எங்கே நடந்து வருகிறார் என்பதைப் பாருங்கள். அவர் வேண்டுமென்றே ஆடுகளத்தில் நடந்து வந்து அந்த மோதலை தூண்டினார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை”

“அதற்காக விராட் கோலி சில கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்” என்று கூறினார். குறிப்பாக இளம் வீரரிடம் சீனியர் வீரரான விராட் கோலி இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று பாண்டிங் நேரலை விமர்சித்தார். இந்நிலையில் இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை வேண்டுமென்றே இடித்து தள்ளிய நீங்கள் இதைப் பற்றி பேசலாமா என்று அவருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

அதாவது 1998ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் இதே 19 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமாகி விளையாடினார். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பாண்டிங்கை அவுட்டாக்கினார். அந்த விக்கெட்டை ஹர்பஜன் சக இந்திய வீரர்களுடன் கொண்டாடினார். இங்கே விராட் கோலியாவது போகிற போக்கில் சாம் கோன்ஸ்டஸை இடித்தார்.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்திய “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி – விவரம் இதோ

அதை நியாயப்படுத்த முடியாது என்றாலும் அன்றைய நாளில் நேராக சென்ற ரிக்கி பாண்டிங் தனது பாதையிலிருந்து கொஞ்சம் வளைந்து சென்று ஹர்பஜனை இடித்து தள்ளிவிட்டு கிளம்பினார். அந்த வீடியோவை தற்போது இந்திய ரசிகர்கள் தோண்டி எடுத்து பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். மொத்தத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த நிகழ்வுக்காக விராட் கோலிக்கு ஐசிசி 20% போட்டி சம்பளம் அபராதமாக விதித்துள்ளது.

Advertisement