ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடர் 3 போட்டிகளில் முடிவில் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து நான்காவது போட்டியில் வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் 21* விக்கெட்டுகளை எடுத்து சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய போது ஏபி டீ வில்லியர்ஸை அவுட்டாக்கிய பும்ரா அதை வெறித்தனமாக கொண்டாடி அனுப்பி வைத்ததாக மைக் ஹசி கூறியுள்ளார். அப்போது ஸ்லெட்ஜிங் பற்றி தாம் கொடுத்த அறிவுரை தற்போது பும்ராவை மாற்றியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் 2014இல் பும்ரா இவ்வளவு பெரியாளாக வருவார் என்று நினைக்கவில்லை என்றும் ஹசி பாராட்டியுள்ளார்.
ஹசி பாராட்டு:
இது பற்றி வில்லோ டால்க் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா ஐபிஎல் தொடரில் வந்தார். ஒரு போட்டியில் ஏபி டீ வில்லியர்ஸை அவுட்டாக்கிய அவர் வெறித்தனமாக கொண்டாடி அனுப்பி வைத்தார். அதனால் அதிருப்தியடைந்த ஏபி அவரை முறைத்துக்கொண்டே சென்றார். அப்போது பும்ராவிடம் தம்பி நீங்கள் இவ்வாறு செய்யத் தேவையில்லை என்று சொன்னேன்”
“விக்கெட்டை எடுப்பதற்கு உங்களிடம் போதுமான திறமை இருக்கிறது. எனவே விக்கெட்டை எடுத்த பின் அதை கொண்டாடி பேட்ஸ்மேன்களை வழியனுப்பாமல் இருப்பதே மிகப்பெரிய ஸ்லெட்ஜிங். எதிரணியிடம் நீங்கள் மரியாதை பெற விரும்பினால் அவர்களை வழியனுப்பாமல் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை அவருக்கு கொடுத்தேன். தற்போது பும்ராவின் தன்மை குறைந்துள்ளது”
அடக்கமான பும்ரா:
“அவர் பெரிய வீரர். அவர் பந்து வீசுவதை பார்ப்பது எனக்குப் பிடிக்கும். ஆனாலும் இப்போது அவர் அடக்கமானவர். பூமிக்குரிய மனிதராக இருக்கிறார். அவருடன் ஐபிஎல் தொடரில் நான் மும்பையில் ஒரு வருடம் விளையாடினேன். அப்போது இளம் குழந்தையாக வந்த அவர் வலைப்பயிற்சியில் வீசிய ஒரு பந்தை கூட என்னால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. அவருடைய கையிலிருந்து கூட பந்தை என்னால் சரியாக எடுத்து அடிக்க முடியவில்லை”
இதையும் படிங்க: 2இல் 1 ஜெய்ச்சா இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி உறுதி.. என்னை கழற்றி விட்டது நல்லதா போச்சு.. ஜடேஜா பேட்டி
“ஏனெனில் அவருடைய ஆக்சன் தனித்துவமாக இருந்தது. முதல் முறையாக பார்த்த போது அவர் கிரீஸ்க்குள் வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் மிகவும் குறைந்த தூரம் ஓடிவந்த அவர் திடீரென 145 கி.மீ வேகத்தில் கண் புருவத்திற்கு நேராக பந்துகளை வீசினார். அப்போது தான் யார் இந்தப் பையன் என்ற வகையில் பார்த்தேன். ஆரம்பத்தில் அவரால் இந்த பவுலிங் ஆக்சன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாது என்று இந்தியாவில் பேச்சுக்கள் காணப்பட்டன. இருப்பினும் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியும் என்று நான் நம்பினேன். அதை அவர் தற்போது செய்கிறார் அல்லவா?” எனக் கூறினார்.



