இந்திய அணிக்காக விளையாடி வந்த சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இரண்டாவது அதிக (765) விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 2010 – 2012 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போடவும் அவர் முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். ஆனாலும் அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்து வந்தது. அந்த வரிசையில் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஸ்டார்க் பாராட்டு:
அதனால் ஏமாற்றமடைந்த அஸ்வின் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் எனலாம். அவருடைய இந்த அறிவிப்பு தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் ஏமாற்றத்துடன் பாராட்டியிருந்தார். அதே போல அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய அணியில் பெரிய மரியாதை இருப்பதாக கேப்டன் பட் கமின்ஸ் வாழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் முள்ளாக இருந்ததாக மிட்சேல் ஸ்டார்க் பாராட்டியுள்ளார். அத்துடன் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் அஸ்வினுடைய தரத்தை பேசும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சென் ரேடியோவில் ஸ்டார்க் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் எப்போதும் எங்களுடைய அணிக்கு எதிராக இந்தியாவில் கொஞ்சம் முள்ளாக இருந்தார்”
அற்புதமான கேரியர்:
“அதே போல ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற தொடர்களில் அவரும் இந்திய அணியின் அங்கமாக இருந்தார். இது அற்புதமான கேரியர். அவருடைய கேரியர் கொண்டாடப்படும் என்று உறுதியாக சொல்வேன். அவருடைய சாதனைகள் அவரின் தரத்தை பேசும். இந்தியாவுக்காக நீண்ட காலமாக மிகச்சிறந்த பவுலராக செயல்பட்ட அவர் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்”
இதையும் படிங்க: 217 ரன்ஸ்.. மந்தனா உலக சாதனை.. வெ.இ அணியை விளாசிய இந்தியா.. 5 வருடத்துக்கு பின் சாதனை வெற்றி
“நேதன் லயனும் அவரும் நெருக்கமான உறவை வைத்துள்ளார்கள். எங்கள் அணிகளுக்கு இடையே பரஸ்பர மரியாதையும் உள்ளது. திறமையான அவருக்கு அமைந்த இந்த கேரியருக்கு வாழ்த்துக்கள். இது அற்புதமான கேரியர். அது நல்ல வழியில் கொண்டாடப்படும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் விளையாட உள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



