ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. அதில் முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் சமனில் உள்ளது. அந்த நிலையில் முக்கியமான மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 28-1 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்யாமல் பந்து வீசியது தவறாக அமையலாம் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
சுமாரான முடிவு:
அது வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்கும் முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பாக்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த டாஸில் தோல்வியை சந்திப்பதற்கு பட் கமின்ஸ் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார். அவர் எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. இந்த மைதானத்தின் வரலாறு காரணமாக ஒருவேளை பேட்டிங்கில் சாய்ந்திருக்கலாம்”
“ஆனால் முதலில் பந்து வீசுகிறோம் என்று ரோஹித் சர்மா சொன்னதால் பட் கமின்ஸ் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சியில் மழை பெய்வதற்கு அதிகமான வாய்ப்புள்ள இந்தப் போட்டியின் பிட்ச் முதலில் பவுலிங் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று தமக்கும் தோன்றவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ரெண்டன் ஜூலியன் கூறினார்.
இந்தியாவுக்கு பின்னடைவா:
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மேத்யூ ஹைடன் கூறியது பின்வருமாறு. “ரோஹித் முதலில் பந்து வீச தீர்மானித்துள்ள இந்த முடிவு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அது கொஞ்சம் அதிகப்படியான தயாராகும் முறை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் கடந்த 2 வாரங்களாக இங்கே 12 இன்ச் அளவுக்கு மழை பொழிந்துள்ளது. அதனாலேயே இங்கு முதல் சில நாட்கள் பேட்டிங் செய்வதற்கு நல்ல சூழ்நிலை இருக்கும் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: 3 ஆவது போட்டி டிராவானால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லுமா? – விவரம் இதோ
“பின்னர் பிட்ச்சில் வெடிப்புகள் ஏற்படும். அதைப் பயன்படுத்தி இந்த மைதானத்தில் உலகின் சிறந்த ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்” என்று கூறினார். மறுபுறம் மழை காரணமாக பிட்ச் பவுலிங்க்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்தார். ஆனால் முதல் நாளில் வீசப்பட்ட 13.2 ஓவரில் ரோஹித் நினைத்தது போல இந்திய பவுலர்களுக்கு ஸ்விங் கிடைக்கவில்லை.



