அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரை வெல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் விளாசி இந்தியாவை தோற்கடித்தார்.
அப்போது அவரை அவுட்டாக்கிய சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் ஆக்ரோசமாக வழி அனுப்பினார். அதற்கு டிராவிஸ் ஹெட் சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டு சென்றார். மறுபுறம் தங்களுடைய உள்ளூர் ஹீரோவை கோபமாக அனுப்பிய சிராஜுக்கு எதிராக அடிலெய்ட் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
சிராஜ் – ஹெட் மோதல்:
பின்னர் நன்றாக பந்து வீசினீர்கள் என்று சொன்னதற்காக சிராஜ் அப்படி நடந்து கொண்டது ஏமாற்றத்தை கொடுத்ததாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அவர் சொன்னது பொய் என்று தெரிவித்த சிராஜ் தம்மிடம் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாலேயே அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்தார். அத்துடன் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய கோபத்திலும் தம்முடைய பந்தில் சிக்ஸர் அடித்த விரக்தியில் அப்படி செய்தேனே தவிர மரியாதை குறைவாக நடந்து கொள்ளவில்லை என்றும் சிராஜ் கூறினார்.
அது போக மூன்றாவது நாளில் பேட்டிங் செய்த சிராஜ் அருகில் நின்று கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் தாமாக சென்று சமாதானமாகும் வகையில் பேசினார். இறுதியில் போட்டியின் முடிவில் அந்த இருவருமே புன்னகையான முகத்துடன் கைகொடுத்து ஜென்டில்மேன்களாக சென்றார்கள். இந்நிலையில் அந்தத் தருணத்தில் சிராஜ் எல்லை மீறி நடந்து கொள்ளவில்லை என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏபிடி ஆதரவு:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹெட் மேட்ச் வின்னிங் சதமடித்த காரணத்தால் அப்படி வழியனுப்பியதை பற்றி பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால் அது தான் சிராஜ். அதுவே அவருடைய ஆர்வம், உற்சாகம், கிரிக்கெட்டில் தம்முடைய அணியின் வெற்றிக்காக போராடும் உந்துதல். கிரிக்கெட்டில் இது போன்ற போட்டிகளை நான் விரும்புவேன். வரம்பு கோட்டை தாண்டாத வரை அங்கே என்ன சொல்லப்பட்டது என்பது பற்றி எனக்கு கவலையில்லை”
இதையும் படிங்க: இந்தியா கம்பேக் கொடுக்க கமின்ஸை ரூட்டை எடுக்கனும்.. ரோஹித் இதை மாத்தணும்.. ரவி சாஸ்திரி 2 அட்வைஸ்
“இங்கே வரம்பு என்பது ஒரு நபரின் தனிப்பட்ட சொந்த விஷயங்கள், இனம் மற்றும் மத விஷயங்கள் ஆகும். மற்ற படி அதை கவனிக்காமல் விடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். அதாவது பரபரப்பான போட்டிகளில் இவ்வாறு மோதிக் கொள்வது சகஜம் என்று டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். மேலும் ஒரு வீரரின் மதம், குடும்பம், இனம் போன்றவை பற்றி மற்றொரு வீரர் பேசாத வரை இது போன்ற மோதல்கள் மோசமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்



