பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் அபாரமாக பந்து வீசி 104க்கு சுருட்டிய இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் பேட்டிங் செய்த இந்தியா அற்புதமாக விளையாடி 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தியா வெற்றி:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, கேஎல் ராகுல் 77, விராட் கோலி 100* ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 534 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 238 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89, மிட்சேல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 3, சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அதனால் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வீழ்த்திய அணியாக சாதனை படைத்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றது. இந்த வெற்றியால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா மீண்டெழுந்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை (295 ரன்கள்) பதிவு செய்து சாதனை படைத்தது.
சாதனை வெற்றி:
இதற்கு முன் கடந்த 1977ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் முந்தைய மிகப்பெரிய வெற்றியாகும். அத்துடன் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் (295) வித்தியாசத்தில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியும் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: விராட் கோலி எப்போவும் ஃபார்ம் அவுட்டில்லை.. 2018லயே இந்த வெற்றிக்கான திட்டம் கிடைச்சுது.. கேப்டன் பும்ரா
இதற்கு முன் இங்கிலாந்தின் ஹெண்டிங்லே மைதானத்தில் 1986ஆம் ஆண்டு 279 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் முந்தைய பெரிய வெற்றியாகும். அந்த வகையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் இந்தியா சாதனை வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியா போராட உள்ளது.



